Sunday, 20 December 2020

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 9:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 9:



"பாடிடுவீர் பாடிப் பரவசத்தால் மெய்சிலிர்த்து

ஆடிடுவீர் ஆடி அடங்கியுளம் பூரித்துத்

தேடிடுவீர் தேடித் திருவடியை நுஞ்சிரமேற்

சூடிடுவீர் சூடிச் சுமங்கலையாம் தேவியருள்

நாடிடுவீர் நாடி நலம்பெறவே அன்பருடன்

கூடிடுவீர் கூடி நீர் பேரின்பங் கண்டீரேல்

காடும் ஓர் வீடாகும் காசினியில் நீர் வசிக்கும்

வீடுமே பெருவீடாங் காணேலோரெம்பாவாய்"


விளக்கம் :


"அம்பாளின் புகழைப் உளங்குழைந்து பாடுவீர்!! அப்பரவசத்தால் மெய்சிலிர்த்து தனை மறந்து ஆடுவீர்!!


பக்தியின் முதல் நிலை இதுவே!! பரதேவதையின் புகழைக் கேட்டு மெய்மறந்து பாடி ஆடுவது!! 


பின் மனமடங்கி அம்பாளின் திருவடியை த்யானித்து, சிரஸில் அவள் திருவடி இருப்பதை ஸதா பாவித்திருப்பீர்!!


ரக்த சுக்ல மிச்ராத்மகமான ஶ்ரீபரதேவதை காமாக்ஷியின் திருவடியானது சிரஸின் மத்யத்திலே இருப்பதாக பாவிப்பது ஶ்ரீவித்யோபாஸக ஸம்ப்ரதாயம்!! 


தேவியின் திருவடியிலிருந்து பெருகும் அம்ருதத்தால் எழுபத்துரெண்டாயிரம் நாடிகளும் நனையப்பெற்று ஜீவன்முக்த நிலையை அடைந்திடுவீர் என்பதையே ஶ்ரீகாமாக்ஷி தாஸர் இங்கே கூறுகிறார்!!


ஸதா பரதேவதையின் திருவடியை சிந்தையில் நினைந்து, ஓங்காரியான அவளின் மஹாமந்த்ராதிகளை ஜபித்து, அவளருளைப் பெறும் வழியைத் தேடுவீர்!!


அத்தகைய அருளைப் பெறும் வண்ணம், அவள் புகழைப் பாடும் அன்பர் கூட்டத்துடன் கூடிடுவீர்!! ஸத்ஸங்கத்தில் திளைப்பீர் என்கிறார்!!


அம்பாளின் மஹிமையை நாமே உணர்ந்து அனுபவிப்பதைக் காட்டிலும், அவள் மேல் பக்தியுடன் இருக்கும் மற்றோருக்கு அதை உணர்த்தும்படி அவள் மஹிமைக் கூறுவதும், அவளின் பெருமையைக் கேட்பதும் அந்த இன்பமே தனி!! 


ஸர்வத்திற்கும் ஆதியான மஹாசக்தி ஶ்ரீலலிதை என்பதையும், கோடிக்கணக்கான த்ரிமூர்த்திகளையும், பலகோடி ப்ரஹ்மாண்டங்களையும் கண் இமைக்கும் நேரத்தில் உண்டாக்கி மறைக்கும் ஆதிசக்தி என்பதையும், அனைவரிடத்திலும் ஆத்மஸ்வரூபமாக விளங்குபவள் இவளொருத்தியே என்பதையும், ஸத்ய ஏக வஸ்துவான லலிதா மஹாத்ரிபுரஸுந்தரி தேவியைக் காட்டிலும் மற்றொன்று இல்லை எனும் உபநிஷத வாக்யங்களைக் கேட்கும் போது நெஞ்சம் விம்முகிறது அல்லவா!! 


காமாக்ஷி, லலிதா, மீனாக்ஷி, அபயாம்பிகே, சிவகாமஸுந்தரி, கமலாம்பிகே, மங்கலாம்பிகே என்று அவளின் நாமங்களைக் கேட்கும் போது "என் அம்மா இவோ" எனும் ஆனந்தத்துடன் கூடிய நிறைவு

ஏற்படுகிறதல்லவா!! அதுவே மஹதாநந்தம்!!


இப்படிப்பட்ட ஆனந்தம் ஏற்பட்டுவிடின் காடும் வீடாகும்!! ஜீவன்முக்தனுக்கு காடென்ன வீடென்ன !!?? அனைத்தும் ஶ்ரீகாமக்ஷியின் வாசஸ்தானம் தான்!!


ஶ்ரீமந்நகரநாயிகையான ஶ்ரீலலிதாம்பாள் மஹாராஜ தர்பாரில் மஹாத்ரிபுரஸுந்தரியாக ஸிம்ஹாஸனத்திலும் விளங்குவாள்!! ஸ்மசானத்தில் ஸதாசிவனான சவத்தின் மேல் கிளம்பும் தாமரையின் மீது ஸ்மசான ஷோடஷியாகவும் விளங்குவாள்!!


அதுபோல் காலிகா ரூபத்திலும் ஸ்மசானத்திலே மஹாகாலரின் ஹ்ருதயத்தில்  விளங்கும் பாதத்தைக் கொண்டு மஹாதக்ஷிணகாலியாகவும் விளங்குவாள்!! மஹாகைலாஸ நகரத்தில் ஸிம்ஹாஸனத்திலும் ஶ்ரீமஹாகாலியாக விளங்குவாள்!!


அம்பாளுக்கு எப்படி அனைத்தும் ஒன்றோ, அது போலவே உபாஸகர்க்கும்!! அனைத்தும் ஒன்றாகவே காண வேண்டும்!!


அப்படி ஶ்ரீகாமாக்ஷியை உபாஸிப்போர்க்கு காடும் வீடாகும், காசினியிலே இப்போது நீர் வசிக்கும் பெருவீடாகும்!!


தேவி உபாஸகனுடைய வீடே மணித்வீபம்!! பூஜையறையே ஶ்ரீசக்ரம்!! அமர்ந்துள்ள ஸ்தானமே பிந்து!! எதிரிலிருக்கும் தேவியின் விக்ரஹமோ அன்றி சித்ரபடமோ ஸாக்ஷாத் லலிதாம்பாள்!! இதுவே ஸத்யம்! ஸத்யம்!! ஸத்யம்!!!


இத்தகைய பக்குவத்தை அளித்து பரதேவதை முக்தியை அளிக்கட்டும்!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...