Friday, 18 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 8:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 8:



"வேணும்பொழுதடியர் வேண்டுமவை ஈந்தருளி

தோணித்துறையிருந்து தோன்றாத்துணையாகி

வீண் இப் பிறவி அலை வேலைக் கடக்க அருள்

வாணிக்கும் நாரணிக்கும் மேலான பூரணியை

காணக் கவலை போம் கஞ்சக் கழலிரண்டும்

பேணப் பலநிதியாம் பேறு தரும் குங்குமத்தைப்

பூணப் பலநிதியாம் புண்ணியமாம் கண்ணியமாம்

காணப் புறப்படுமின் இன்றேலோர் எம்பாவாய்"


விளக்கம்:


"அடியார் வேண்டுவனவற்றையெல்லாம்  அவற்றை அளிப்பவள் பராசக்தி!!


அப்பராசக்தி உறையும் மஹாபீடமான ஶ்ரீகாமகோடி என்பதற்கு ஶ்ரீகாமாக்ஷி விலாஸம் கூறும் பொருளாவது!!


"தர்மம் அர்த்தம் காமம் இவற்றை மட்டும் விரும்பும் புபுக்ஷூவிற்கு இவைகளை அளித்து மோக்ஷத்தில் இச்சையுமளித்து, மோக்ஷத்தை அளிப்பதனாலும், தர்மார்த்த காமங்களில் இச்சையில்லாத முமுக்ஷுவிற்கு அவர்கள் விரும்பும் மோக்ஷத்தை நொடியில் அளிப்பதாலும், மோக்ஷானுக்ரஹ பராசக்தியாய் விளங்குவதாலும் அவள் உறையும் மஹாபீடமானது காமகோடி எனப்படும்!! காமத்தின் இறுதியான கைவல்ய முக்தியை மிகுந்த ப்ரயாசை இல்லாமலேயே வழங்கும் மஹாபீடமாதலின் இது காமகோடி!!"


உலகில் பிறந்த கணம் முதல் மரிக்கும் கணம் வரை தோன்றாத் துணையாகி விளங்குபவள் ஶ்ரீபராசக்தியான ஜகன்மாதா. இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் துணையாய் விளங்கும் ஆதிசக்தி இவள்.


வீணான இப்பிறவிக்கடலை கடக்க துணையாகி விளங்குபவள். வாணியாம் ஸரஸ்வதிக்கும், நாரணியாம் லக்ஷ்மிக்கும் மேலான பூரணியாகி விளங்குபவள்!!


ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் அம்பாளின் இருபுறங்களில் நின்று சாமரம் வீசுவதாக புராணங்களும் தந்த்ரங்களும் கூறும்!! ஸரஸ்வதி, லக்ஷ்மி எனும் இரு சக்திகளும் அம்பாள் ஒருத்தியே!! இவளே காளி, லக்ஷ்மி, ஸரஸ்வதி எனும் சக்திகளாகி விளங்குபவள். எனினும் வலது இடது கண்களிலிருந்து ஶ்ரீயாம் லக்ஷ்மியையும், வாணியாம் கலைமகளையும் தோற்றுவித்ததால் அம்பாள் லக்ஷ்மிக்கும் ஸரஸ்வதிக்கும் தாயார் ஸ்தானத்தில் விளங்குகிறாள். ஆதலில் இங்கு வாணிக்கும் நாரணிக்கும் மேலான பூரணி எனக் கூறப்பட்டது.


காஞ்சிமா நகரில் அப்பூரணியாம் பராசக்தியைக் காண கவலை அற்றுப்போகும்!! 


தாமரை மலர் போல் விளங்கும் பாதங்களிரண்டையும் காண அஷ்ட ஐச்வர்யங்களும் முக்தியும் கிடைக்கும்!!


தேவியின் மஹாமஹிமையுடைய குங்குமப் ப்ரசாத்தைப்பூண மஹத்தான புண்ணியமும், வீடு பேறும், கண்ணியமான நெஞ்சமும் ஏற்படும்!!


இப்படி ஸகல ஸௌபாக்யங்களுடன் விளங்கும் ஶ்ரீகஞ்சி காமாக்ஷி அம்பாளைக் காணப் புறப்படுவோம் வாருங்கள்!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...