ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 7:
"ஆதிமுதலாகி அண்டமெனலாந்தானாகி
நாதனொரு பாதி நானென்ற நாயகியின்
நீதிநெறியுடையார் நின்மலச் சிந்தையில் வாழ்
பாதி மதிசூடும் பார்புகழும் கற்பகத்தின்
வேத முடிப்பொருளின் மேருவாங் கோபுரத்தை
வீதிவலம் வந்து விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும்
காது குளிர்ந்திடவே காமாக்ஷி நற்புகழை
ஓதியுயர்ந்திடுவதென்றேலோர் எம்பாவாய்!!"
விளக்கம்:
"அனைத்திற்க்கும் ஆதியாகி, ஒன்றான ப்ரஹ்ம தத்வமே வடிவாகி, பின் விமர்ச சக்தியாக உலகமாய் விரிந்தவள் பராசக்தி.
ஏகவஸ்துவான பரப்ரஹ்ம தத்வம் முதலில் பெண்ணுருக்கொண்டு, பின்னர் ஆணுருக்கொண்டது என்பது சாக்தத்தின் கொள்கை. த்ரிபுரா ரஹஸ்யம் முதலிய க்ரந்தங்களும் அம்பாளின் வைபவத்தை இவ்வண்ணமே கூறுகின்றன.
முதலில் லலிதாம்பாளாகி, பின்னர் காமேச்வரனான பராசக்தி பின்னர் ஶ்ரீசக்ர ரூபமாய் சிவசக்தி ஸம்மேளன சக்ரமாகி, அதன் ப்ரதிபலிப்புமாகி உலகமாய் விரிந்து நின்றாள்.
அச்சிவத்தினொரு பாதியாகி விளங்கினாள் பராசக்தி. லலிதாம்பிகையான ஜகன்மாதா தனது வலபாகத்திலிருந்து காமேச்வரனாகத் தானே தோன்றினாள் என தந்த்ரங்கள் கூறும்!!
இக்காக்ஷியை மறுபடி ப்ரஹ்மாதி பஞ்ச மூர்த்தங்களுக்குக் காட்டினாள் என ஶ்ரீத்ரிபுரா ரஹஸ்யம் கூறும்!!
நாதனொரு பாதியாய் நின்ற பராசக்தி, நெறிமாறாத சிந்தையுடைய பக்தர்களின் உள்ளத்தில் வாழ்பவள். மலங்களில்லா தூய நெறியுடையோர் உள்ளத்தில் இனிது அமர்பவள் பராம்பிகை.
பாதிமதியை சிரஸிலே சூடி விளங்குபவள். உலகெலாம் புகழ்ந்து ஓதற்குறியவள். வேதத்தின் முடிவான பொருளானவள்.
மஹாமேருவின் உச்சியில் ஶ்ரீயநத்ர மத்யத்தில் இனிது விளங்குபவள்.
மஹாமேருவை வலம் வருவது எப்படி!!? எனில் ஶ்ரீசக்ரபுரமான காஞ்சி நகரத்தினில் விளங்கும் பூ சிந்தாமணி க்ருஹமான காமகோஷ்ட ஆலயத்தை வலம் வந்து,
(காமாக்ஷி அம்பாள் ஆலயத்தை ஒரு முறை வலம் வருவது அச்வமேத யாகத்தின் பலனை அளிக்கும் என்பர்)
அங்கு குழுமியிருக்கும் விண்ணோர்க்கும் மண்ணோர்க்கும்
(நம் ஊனக்கண்களுக்கு தெரியாமல் சக்தி கணங்களும், திவ்யௌக ஸித்தௌக மானவௌக உபாஸகக் கூட்டங்களும் அங்கே பரதேவதையான ஶ்ரீலலிதாம்பாளை தர்சிக்க குழுமியிருப்பதாக ஐதீகம்!!)
அவர்கள் காது குளிரும்படி ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் நற்புகழை எடுத்துக்கூறி, அவளின் பெருமைகளை ஓதி, அவ்வம்பிகையை உணர்வது எப்போது!!?
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment