ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 6
பஞ்சமலர்க்கணையும் தித்திக்கும் விற்கழையும்
அஞ்சுமடியர் இடர் நீக்க வல்லங்குசமும்
தஞ்சமெனுமவரை காக்கவல்ல பாசமுடன்
கஞ்சிநகர் தனிலே காமபீடந்தனிலே
மிஞ்சுமழகுடனை வீற்றிருக்கும் சாம்பவியின்
கஞ்சமலர்ப்பதத்தைக் கண்டுள்ளம் பூரித்து
கெஞ்சி பலர் செவிகள் கேட்கப்புகழ் பாடிக்
கொஞ்சியருள் பெறுவதென்றேலோர் எம்பாவாய்!!"
விளக்கம்:
தாமரை, அசோகம், மா, நவமல்லிகை, நீலோற்பலம் எனும் பஞ்சமலர்ப் பாணங்களையும், மிகவும் தித்திப்பான வில்லையும் (அதிமதுர சாப ஹஸ்தாம் -- மிகவும் தித்திப்பான வில்லை ஏந்தினவள் லலிதா த்ரிசதி)
(ஏனைய தேவதைகளுக்கு இரும்பாலான ஆயுதங்களே, ஸாக்ஷாத் லலிதாம்பாளின் மற்ற அவஸரங்களில் கூட சண்டிகையாக, துர்கையாக, காளியாக, வாராஹியாக, விளங்கும் போது இவளுக்கே இரும்பாலான ஆயுதங்கள் உண்டு!!
லலிதா,மஹா த்ரிபுரஸுந்தரி, காமாக்ஷி, ராஜராஜேச்வரி, காமேச்வரி எனும் ஶ்ரீவித்யோபாஸனையின் லக்ஷ்யமான மூர்த்திக்கே கரும்புவில்லும், மலர்க்கணையும்!!
(ஶ்ரீமத்ஆச்சார்யாள் ஸௌந்தர்யலஹரியிலே கூறும் போது "சிரீஷாபா சித்தே" என்கிறார்!! வாகைப்பூவைப் போல ம்ருதுளமான ஹ்ருதயத்தை உடையவள் என்று கூறுகிறார்!!
ம்ருதுவான ஹ்ருதயம் உடையவளாதலால் கரும்புவில்லையும், புஷ்ப பாணங்களையும் ஏந்தி விளங்குகிறாள் நம் காமாக்ஷி!!)
அஞ்சேலென்று ஓடி அபயம் கேட்கும் அடியாருக்கு, அபயம் கொடுக்கும் அங்குசத்தை ஏந்தினவளும்,
(ஶ்ரீமத் ஆச்சார்யாள் த்ரிபுரஸுந்தரி வேதபதாக ஸ்தவத்திலே கூறும் போது "பண்டாஸுர வதத்தின் ஸமயம் ரக்தம் தோய்ந்ததால் செந்நிறத்தில் விளங்கும் அங்குசத்தை உடையவளே!!" என்கிறார்!!
அம்பாள் ம்ருதுளமான ஹ்ருதயத்தை உடையவளாயின் அடியார் இடர் நீக்க கோபத்தை வரவழைத்துக்கொள்வாள். அவள் ஸ்வபாவம் கோபமில்லை.
தேவீ மாஹாத்ம்யம் கூறும் "மதுபானத்தைப் பருகி கோபத்தை வரவழைத்துக்கொண்டாள்!!" என்று!!
தேவியின் மூர்த்தி பேதங்களனைத்தும் ஆனந்தத்தையே ஸ்வபாவமாய்க் கொண்டவை. துன்பம் நேர்கையிலே அழைக்கும் போது அபயங்கொடுத்து ரக்ஷிக்கும் குணங்கொண்டவை)
தஞ்சமென்று அடைந்தோரை காக்கவல்ல பாசத்துடன்,
ஶ்ரீபராசக்தி பஞ்சமலர்க்கணையும், தித்திக்கும் விற்கழையும், அங்குசமும், பாசமும் ஏந்தி பூலோக ஶ்ரீபுரமாம் ஶ்ரீமத் காஞ்சிபுரத்திலே, காமபீடந்தனிலே அறுபத்துநானூறு பீடத்தில் உயர்ந்த மஹாகாமகோடி எனும் பீடத்திலே விளங்குகின்றாள்.
"ஶ்ரீகாமாக்ஷி" எனும் அஸாத்யமான மஹாமந்த்ர கர்ப்பிதமான நாமத்துடனே மஹாகாமகோஷ்டத்திலே ஜ்வலிக்கின்றாள்.
(ஸௌபாக்யலக்ஷ்மி கல்பத்திலே மஹாவிஷ்ணு லக்ஷ்மிக்கு கூறியது "ஓ!! லக்ஷ்மி!! ச்யாமளா வாராஹி முதற்கொண்ட சக்திக்கூட்டங்களால் ஸேவிக்கப்பட்ட த்ரிபுராம்பாள் ஶ்ரீகாமாக்ஷி எனும் நாமங்கொண்டாள்!!
காம், கீம், கூம், கைம், கௌம், க: எனும் படி அங்கந்யாஸ கரந்யாஸாதிகளைச் செய்துகொள்
"ஓம் கம் காமாக்ஷ்யை நம:" என்பது தேவியின் உயர்ந்த மஹாமந்த்ரமாம்!!
ச்யாமளாதி சக்திகளால் உபாஸிக்கப்பட்ட மஹாமந்த்ரம் இது!! காமாக்ஷி பஞ்சசதியை ஜபிக்கும் முன்னர் இந்த மந்த்ரத்தை ஜபிக்க வேணும்!!
த்ரிபுராம்பாளின் ஆயிரம் ஸஹஸ்ரநாமங்களிலும் ஶ்ரீகாமாக்ஷி பஞ்சசதி உயர்ந்தது!! த்ரிபுராம்பாளின் ஐநூறு நாமங்கள் ச்யாமளாதி சக்திக்கூட்டங்களாலே சொல்லப்பட்டன!!
குறிப்பு: ருஷி சந்த்ஸ் முதலியன மூலத்தில் கண்டுகொள்க!!)
பஞ்சதசியைப் போல ஒரு ஶ்ரீவித்யா பேதமே காமாக்ஷி எனும் நாமம். காமாக்ஷி என்பது ஒரு நாமம் மட்டுமல்ல மஹாமந்த்ரமாம்!!
அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாக, ஜகதாம்பாளாக, ஸர்வநந்தமயமஹாபீடமாம் சாம்பவ பீடத்திலே ஶ்ரீசாம்பவியாக வீற்றிருக்கிறாள்!!
நவமாவரணம் ஶ்ரீசாம்பவ மஹாசக்ரம்!! ஶ்ரீசாம்பவ பீடத்திலே ஜகன்மாதா ஶ்ரீலலிதாம்பாள் வீற்றிருப்பதால் சாம்பவி என்று பெயர் அவளுக்கு!!
அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி இரண்டு கால்களையும் இறுக்கி மடித்த யோகாசனத்தில் வீற்றிருக்கின்றாள்!!
ஶ்ரீகாமாக்ஷி ஸுத்தமான ஸமயாசாரத்தால் மட்டுமே அடையத்தக்கவள்!! ஸமயமார்க்க உபாஸனையானது ஸநகாதி மஹருஷிகளாலே ஶ்ரீஸுபாகம பஞ்சகம் என்று இயற்றப்பட்டது. அவற்றுள் ஶ்ரீசுகர் இயற்றிய "சுக ஸம்ஹிதா" எனும் மஹாக்ரந்த்தினை அவலம்பித்து ஶ்ரீதூர்வாஸாச்சார்யாள் ஶ்ரீகாமகோஷ்டத்தில் ஶ்ரீசக்ர ஸ்தாபனஞ்செய்து, ஶ்ரீவித்யோபாஸனையால் காமாக்ஷி அம்பாளுக்கு பூஜா பத்ததி அமைத்தார்!!
அப்படிப்பட்ட அஸாத்யமான வடிவுடைய ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் திருவடியைக் கண்டு உளம் பூரித்து, பலர் செவிகள் அவள் புகழை கேட்கும்படியாக பாடி, அவள் அருளைப் பெறுவது என்று!!"
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment