ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 5:
"காலைக்கடன் கழித்து காமாக்ஷி அம்மையினை
வேலைப் பிளந்துதிக்கும் விண்மணியிற்க் கண்டறிவீர்
மாலைப் பொழுதினிலே மாமதுரை மீனவளை
நீலத் திருவானின் வெண்ணிலவில் கண்டறிவீர்
பாலைப் பருவமுள மங்கையெனப் பார்த்திடுவீர்
சீலச் சுமங்கலையின் செம்முகத்திற்க் கண்டறிவீர்
வேலைக் கரம்பிடித்தான் வேலிலையிற்க் கண்குளிர்வீர்
கோலக்குணவதியைக் கண்டேலோர் எம்பாவாய்"
விளக்கம் :
காலைக் கடன் கழித்து -- காலையின் இயற்ற வேண்டிய தேவ கடன் முதலியவைகள் முடிந்த பின்னர்,
ஶ்ரீவித்யோபாஸகர்க்கு வைதீக ஸந்த்யா, தாந்த்ரீக ஸந்த்யா எனும் இரு உபாஸனைகள் உண்டு!! வைதீக தாந்த்ரீக ஸ்ந்த்யாவந்தனங்களை பூர்த்தி செய்து பின்னர் மேகங்களைப் பிளந்து கொண்டு வரும் சூர்ய மண்டலத்தின் மத்தியிலே ஶ்ரீகாமாக்ஷி பரதேவதையைக் கண்டறிவீர்!!!
உதித்து வரும் சூரியனின் மத்யத்தில் உதிக்கும் சூரியன்கள் கோடானுகோடிகளைப் போல் ஒளிபொருந்திய காமாக்ஷி அம்மையினை த்யானிப்பீர்!!
காயத்ரி வடிவானவள் ஸாக்ஷாத் அம்பாளே என்பதும் ஸந்த்யோபாஸகர்கள் இயல்பில் சாக்தர்களே என்பதும், காயத்ரி ஸாக்ஷாத் ப்ரஹ்மவித்யையான ஶ்ரீஅம்பாளே என்பதும் ஶ்ரீமத் தேவி பாகவதம், ஶ்ரீமத் த்ரிபுராரஹஸ்யம் மற்றும் த்ரிபுரா தாபினி முதலிய உபநிஷதங்கள் மற்றும் அனேக ஶ்ரீவித்யா க்ரந்தங்கள் மூலமாகத் தெரிகிறது!!
ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ர ரூபமாய் விளங்கும் பராசக்தியே ஸாக்ஷாத் காயத்ரியாக, அந்த ப்ரகட காயத்ரியின் இருபத்துநான்கு அக்ஷரங்கள் ஸ்தம்பங்களாக அமைய, அதனுள் காயத்ரி மந்த்ரத்தாலே ஸூசிக்கப்படும் ப்ரஹ்மமான ஶ்ரீகாமாக்ஷி தேவி ப்ரகாசிக்கின்றாள்!!
ஆதலால் சூர்யமண்டலத்தில் பகவதி உமையை ப்ரார்த்திக்கவேணும்!!
அதுபோல் மாலைப் பொழுதினிலே சந்த்ரோயம் ஆன பின்னர் ஶ்ரீசக்ரபுரியாம் மதுரையில் மீநாக்ஷி எனும் அஸாத்யமான நாமரூபத்துடன் கரும்புவில் புஷ்பபாணங்களை தாங்கிக்கொண்டு மஹாத்ரிபுரஸுந்தரியாய் விளங்கும் அம்பாளை த்யானிக்க வேணும்!!
மனதில் ஸஞ்சலம், க்ரோதம் முதலிய யாவும் பரதேவதையை சந்த்ர மண்டலத்தில் த்யானிப்பதாலே அழியும்!! மனசாந்தி ஏற்படும்!!
சூர்யமண்டலத்தில் பரதேவதையை த்யானிப்பதால் ஞானம் பெருகும்!!
பாலாம்பாளாக விளங்கும் அவளுடைய வடிவைத் த்யானிப்பீர்!!
மங்கைப் பருவமுள்ள மாதாவை த்யானிப்பீர்!!!
பாலை எனில் ஒன்பது வயதான பெண்
பாலைப் பருவமுள மங்கையெனில் பதினாறு வயதான கன்யை.ஜகன்மாதா பகவதி நித்யகன்யாம்பாளாக ஸாக்ஷாத் சண்டிகா ரூபத்தில் துர்கா பரமேச்வரியாக ஜ்வலிக்கும் க்ஷேத்ரம் கன்யாகுமரி. பாணாஸுரனை ஒழித்து பகவது துர்கை தவக்கோலத்தில் உள்ளாள். அவளே பாலைப் பருவமுள மங்கையாம்!!
சீலச் சுமங்கலை எனில் நித்யஸுவாஸினியாக காமாக்ஷியாய், மீனாக்ஷியாய், தர்மஸம்வர்த்தினியாய், விசாலாக்ஷியாய், காந்திமதியாய், அபயப்ரதாம்பாளாய், மங்களாம்பாளாய், கமலாம்பாளாய் பரம ஸுவாஸினியாக பரமசிவனாரின் மஹாசக்தியாக, காமேச்வரன் கட்டின மங்களஸூத்ரம் கழுத்தில் விளங்க, மூக்குத்தியும் புல்லாக்கும் ஶ்ரீசக்ர தாடங்கங்களும் மிளிர, உதிக்கும் சூர்யனைப் போல் வகிட்டுச் ஸிந்தூரம் பொலிய காக்ஷி தரும் அம்பாள் வடிவம். அத்தகைய அழகிய முகத்தைக் கண்டு ஆனந்தமுறுவீர்!!
வேலைக் கரம் பிடித்த வேலவன் வேல் ஸாக்ஷாத் தேவியின் பஞ்சதசாக்ஷரமே!! பகவதி பார்வதி மூன்று த்ரிகோணத்தைச் சேர்த்து தன் உடலிலிருந்து "சக்தி" எனும் ஆயுதத்தை அளித்தனள். அதுவே வேலாயுதமாம்!! அவ் வேலின் இலை தேவியின் மஹாமந்த்ரமே!! அதில் அம்பிகையை கண்டுணர்வீர்!!
கோலக்குணவதியை, கோமளாங்கி மீநாக்ஷியை, காமேச்வரனின் காமாக்ஷியை கண்டு கை தொழுவீர்!!
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment