ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 4:
"உகமெல்லாம் ஓடியபின் ஒன்றாக நின்றிச்
சகமெல்லாம் ஈன்றருளும் சீர்மிகுந்த தாயை
நகமெல்லாம் நாரணணின் பத்துதிப்பின் வித்தாய்
முகமெல்லாம் தண்ணருள் சேர் புன்முறுவல் காண
இகமெல்லாம் என்றுணையாய் என்குடியைக் காத்துச்
சுகமெல்லாம் ஈயுஞ் சுமங்கலியைக் கண்டு
பகலெல்லாம் பாடி பரவசத்தில் ஆடி
அகமெல்லாம் போய்க் குளிர்வதென்றேலோர் எம்பாவாய்!!"
"ஸர்வயுகங்களும் முடிந்த பின்னர் கல்பாந்தரத்திலே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகளும் உன்னிடம் ஒடுங்கிய பின்னர், ஏகவஸ்துவாய், தன்னைத் தவிர்த்து வேறொன்றுமில்லாத பரவெளியாய் விளங்கும் அம்மே!! பின்னர் உனது யந்திர வடிவான ஶ்ரீசக்ரத்தையும், அதன் ப்ரதிபலிப்பான ப்ரஹ்மாண்டகோடிகளையும் ஒரு கணத்திலே ஈன்றெடுத்தவளான தாயே!!
ஒவ்வொரு கைவிரல் நகக்கணுவிலிருந்தும் மஹாவிஷ்ணுவாம் ஶ்ரீமந்நாராயண மூர்த்தியின் தசவிதமான அவதார பேதங்களை கோடிக்கணக்கில் உண்டாக்கியவளே!!
(ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு முறை தசாவதாரங்களின் உற்பத்தியின் பொருட்டே கோடிக்கணக்கான தசவித அவதாரங்கள் என ஸூசிக்கப்பட்டது.
ப்ரஹ்மாண்டபுராண உத்தர பாகம் ஶ்ரீலலிதோபாக்யானம்
ஶ்ரீமத் த்ரிபுரா ரஹஸ்ய மாஹாத்ம்ய காண்டம்
மற்றும் பல தந்த்ரங்களில் இந்த சரித்ரம் உண்டு!!
கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : (ல.ஸ)
கராங்குலிநகோதய விஷ்ணு தசாவதாரே (கமலாம்பா நவாவரணம்))
அருள்பொழியும் முகமெல்லாம் ப்ரகாசமாகி விளங்கும் மந்தஸ்மித்தினை உடையவளே!! ஸர்வாநந்தமய மஹாபீடத்தை உடையவளாதலால் பரமப்ரகாசமான ஆனந்தத்தின் ஸ்வரூபத்துடன் கூடினவளே!!
அத்தகைய ஸ்வரூபத்தைக் காணும் வண்ணம் உன் ஆலயஞ் சேர்ந்து விளங்கும் போது, எனக்கு துணையாய் விளங்கி, என் குலத்திற்கு தெய்வமாய் குலத்தைக் காத்து, இவ்வுலகில் ஸகல ஸௌபாக்யங்களையும் ஈந்தருளும் சுமங்கலையான காமாக்ஷியே!!
உன்னைக் கண்டு பகற்பொழுதெல்லாம் பாடி, பரவசத்தினால் உள்ளம் உருக ஆடிக்கொண்டு
(பலவிதமாய் உன்னை பாடவும் ஆடவும் -- ஶ்ரீசக்ர ராஜ( அகத்தியர் கீர்த்தனை))
அத்தகைய அருட்ப்ரவாஹத்தால் அகம் குளிர்ந்து போக, மனமானது அழிந்து லயத்தை அடைய, உன் ஸ்வரூபமானது உணரப்பெற்றதாலே அகம் குளிர்ந்து மனம் அழிந்து போகும் நிலையை எப்போது அருள்வாய் தாயே!!"
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment