ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 3:
"செம்மான் மகளைத் திருடித் திருமணங்கொள்,
பெம்மான் முருகனைப் பேணி பணிந்திடும் நாள்,
அம்மாவெமை வந்து ஆட்கொண்டாளாட்கொண்டாள்,
இம்மாவருள் அதனை ஏத்தாதிருந்திடவோ!?
சும்மாவினி நாவும் சொல்லாதிருந்திடுமோ!?
தம்மாலுலகெலாம் தாங்கி உணவூட்டும்,
செம்மால் புகழ்ந்தேத்தும் சீர்கொண்ட கற்பகத்தை,
உம்மாலியன்றவரை ஓதேலோர் எம்பாவாய்!!"
விளக்கம் :
"மான் வயிற்றிலுதித்த வள்ளிப்பிராட்டியைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்ட பெருமானாம் முருகனையே வழிபட்டு வரும் நாளில், அதத்கைய முருகப்பிரானுக்கும் மற்ற உலகினர் அனைவருக்கும் தாயாக விளங்கி வரும் பராசக்தியாகிய ஶ்ரீகாமாக்ஷி தானாகவே வந்து ஆட்கொண்ட மஹிமையை எங்ஙனம் சொல்வேன்!! எப்படிச்சொல்வேன்!!
(ஶ்ரீஸுப்ரமண்ய உபாஸனை ஶ்ரீவித்யையிலேயே கொண்டு விட்டுவிடும் என்பதை எளிமையாய்க் கூறுகிறார் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்!! ஆதியில் முருகனை வழிபட்டுப் பின் அம்பிகையிடம் சரணாகதி செய்த அடியார் அனேகருண்டு!!
ஶ்ரீவித்யை தமிழகத்தில் பரவக் காரணமாவிருந்த ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதர் எனும் ஶ்ரீநெடிமிண்டி ஸுப்ரமண்ய ஐயர் ஶ்ரீமுருகனை உபாஸித்தவரே. பின் ஶ்ரீகுஹாநந்தநாதாளை அடைந்து அவரருளால் ஶ்ரீவித்யையை அடைந்து, பன்னிரு வருஷங்கள் ஶ்ரீவேலாயுதத்தையே ஶ்ரீசக்ரமாய் பூஜித்து வந்தவர்!!
ஶ்ரீஅருணகிரிநாதரும் ஶ்ரீபராசக்தியின் பலவடிவங்களையும் மந்த்ர பீஜாக்ஷரங்களையும் திருப்புகழின் அனேக இடங்களில் கூறியுள்ளதைக் காண்க!!
ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஶ்ரீசிதம்பரநாதமஹாயோகீச்வரரிடம் காசியில் ஶ்ரீவித்யா மஹாஷோடஷாக்ஷரி எனும் மஹாமந்த்ரோபதேசத்தை அடைந்து, பின் திருத்தணி வர, ஶ்ரீஷண்முகர் வயதான கிழவராய் தோன்றி கல்கண்டை அவர் வாயில் போட, ஶ்ரீவித்யா பரமான ஶ்ரீகுருகுஹ விபக்திக் கீர்த்தனையைத் தொடங்குகிறார். ஶ்ரீஸுப்ரமண்யரைத் தன் குருநாதராகவும், ஶ்ரீவித்யையில் உயர்ந்த காதிமதத்தைத் சேர்ந்தவராகவுமே தன்னை முதல் கீர்த்தனையான "ஶ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி" என்பதில் கூறுகிறார்.
ஶ்ரீரமணமஹருஷியை ஸுப்ரமண்யாவதாரமாகவே கூறுவதுண்டு. ரஹஸ்யமாக ஶ்ரீசக்ரபூஜையையே அவர் செய்து வந்தார் என்றும் கூறுவர்.
அனேக மஹான்கள் இது போல் ஸுப்ரமண்ய உபாஸனை செய்து பின்னர் அவரருளால் ஶ்ரீவித்யோபாஸனை அனுக்ரஹிப்பெற்று பரதேவதையின் திருவடியை அடைந்துள்ளனர்!!)
இப்படி வலியவந்து ஆட்கொண்டு அருளும் பரதேவதையின் அருளைப் போற்றிப் பாடாது இருக்கவும் இயலுமோ!!?
எனது நாவும் காமாக்ஷியம்மையின் மஹிமையைப் பேசாது இருந்திடுமோ!!?
இவ்வுலகையெல்லாம் தமது கருப்பத்திலே தாங்கி, அவ்வுயிர்க்கூட்டத்திற்கு உணவளித்தருளும் கல்பகக்கொடியான ஶ்ரீகாமாக்ஷியம்மையை, திருமாலான மஹாவிஷ்ணுவால் வழிபடப்பெற்ற எமது அம்மையை,
நம்மாலியன்றவரை அவள் புகழைப் பாடிப் பணிய வேண்டாமோ!!?"
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment