ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 2:
"சும்மாவிருவென்று சொன்னார் ஒரு சாரார்
அம்மாவெனக்கூவி ஆறுதல் நாம் காணாது
எம்மாலிருக்கவிங்காகுமோ வாய்திறந்து
அம்மாவென அழைத்தோம் ஆயேவென அழைத்தோம்
சிம்மாஸனத்துறையும் தேவியெனவழைத்தோம்
பெம்மான் சிவனிடத்துப் பெண்மணி என்றழைத்தோம்
நம்மாலியன்றவரை நாவாரப் பாட்டிசைத்தோம்
சும்மாவிருக்குமோ சொல்லேலோர் எம்பாவாய்!!"
விளக்கம்:
""சும்மா இரு!!" என்று அருணகிரியாருக்கு ஶ்ரீமுருகப்பெருமான் உபதேசித்ததாகக் கூறுவர். அத்தகைய ஸமாதி நிலையோ ஸாமான்ய மக்களான நம்போன்றோருக்கு ஸித்திப்பது கடினம். சும்மா இருப்பது என்றால் உடல் மட்டுமல்ல, மனமும் அடங்கிய நிலையே அது!! அத்தகைய நிலையை அடைவது கடினமல்லவா!! அத்தகைய நிலையை உபதேசிப்பவர்கள் ஒரு சாரார்!! அவர்கள் அனைத்தும் உணர்ந்தவர்கள்!!
ஆனால் நம்போன்றோரால் அங்ஙனம் இருக்க இயலாது அல்லவா!! நம்மால் பிராட்டியாகிய ஶ்ரீகாமாக்ஷியம்மையை அம்மா எனவழைத்து ஆறுதலடையாமல் எப்படி இருக்க இயலும்!! ஆதிசக்தியான அம்பிகை கருணையுருக்கொண்டு கைகளில் கரும்பும், பூவாளியும், மாவெட்டியும், பாசக்கயிறும் தாங்கி ராஜராஜேச்வரியாக, திரிபுரசுந்தரியாக, காமாக்ஷியம்மையாக காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளாள்.
அவளை "அம்மா!! தாயே!! பராசக்தி!!" எனவழைத்து மகிழ்வதைக் காட்டிலும் நிம்மதியும்,ஆனந்தமும், ஆறுதலும் உண்டோ!! ஆதலின் அவ்வம்பிகையாகிய ஶ்ரீகாமாக்ஷித் தாயாரை வாய்நிறைய "அம்மா!!" என்றழைத்தோம்!! "ஆயே!!" என்றழைத்தோம்!!
"ஶ்ரீசக்ரத்தின் மத்யத்திலே பிந்துபீடத்திலே பஞ்சப்ரேதமயமான மஹாஸிம்மாசனத்திலே உறையும் தேவி!!" என அழைத்து மகிழ்ந்தோம்!!
"எம்பெருமான் சிவனிடத்து அமர்ந்து விளங்கும் பெண்ணில் நல்லாள்!!" என்றழைத்தோம்!!
அம்பாளின் பெருமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கவ்வளவு வாயாரப் பாட்டிசைத்தோம்!! தேனினும் இனிமை வாய்ந்த காமாக்ஷியாம் ஶ்ரீலலிதையின் நாமத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்தோம்!!
ஓ!! பெண்ணே!! இனியும் சும்மாவிருக்கலாமா!! நீ!! காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுவாயாக!!"
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment