Friday, 18 December 2020

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை


 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 1:




கணபதிக் காப்பு :


அத்திமுகத்தோனை அன்றிருந்து பேணாது

சத்தி தனதென்று தானினைந்த சங்கரனை

சத்தியியல்பறிய தேரச்சு தூள் செய்த

சித்தி விநாயகனை சித்தத்தில் வைத்தீரேல்

சத்தி அருள்பெறலாம் சாதிக்கலாம் ஏதும்

முத்தி நிலைபெறலாம் மும்மலமும் நீங்கியொரு

சுத்தவுளம் பெறலாம் தூய்மையாம் வாழ்வுறலாம்

நித்த நிலைபெறலாம் நின்றேலோர் எம்பாவாய்


அருட்பாவை 1:


தாயைத் தனிமுதற் சாட்சியாம் சங்கரியை

மாயப்பிணி அகற்றும் மந்திர மாமணியைத்

தூயப்பெருவாழ்வு தந்தருளும் சுந்தரியைச்

சேயைத் துணைகொளும் சீர்மிகுந்த கற்பகத்தை

பேயைப் பழிக்கும் துயிலகற்றிப் பேதையரே

நேயத்துடன் கூடி நின்மலச் சிந்தையொடு

வாயைத் திறந்து நீர் வாழ்த்தினால் வாழ்ந்திடுவீர்

காயத்துடன் வீடு கண்டேலோர் எம்பாவாய்


விளக்கம் :


மார்கழி முதல் நாளுக்கான அருட்பாவை விளக்கம். காமாக்ஷியம்மையின் அருள்பெற்ற மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷிதாஸர் இயற்றியது.


"உலகெலாம் ஈன்றெடுத்த அன்னையாம் அம்பிகையை, தனிப்பெரும் ப்ரஹ்மமாய் விளங்கும் பராசக்தியை, உலகிற்கெல்லாம் ஒரே சாட்சியாய் விளங்கும் உமா தேவியை, சங்கரனின் இல்லாளை, மாயையெனும் கொடும் பிணி அகற்றும் மஹாமந்திரமாம் பஞ்சதசாக்ஷரி எனும் ஶ்ரீவித்யை வடிவானவளை, பிரமவிஷ்ணுக்களும் அடைவதற்கு அரிதான திருவடிமுத்தியாம் தூயப்பெருவாழ்வு தந்தருளும் திரிபுரசுந்தரியை, வணங்கும் சேய்களுக்கு அஞ்சேலென ஓடிவந்து அருள் கற்பகவல்லியான அம்பிகையை,


பேயைப் பழிக்கக்கூடியளவிற்கு விடியற்காலையில் தூங்கும் பேதைகாள்!!, வாருங்கள் நியமத்துடன் கூட மலங்களில்லாச் சிந்தையுடன், வாய்விட்டு காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுங்கள்!! ஏகாம்பரநாதரின் இல்லாளின் மகிமையைப் பாடுங்கள்!! காமேச்வரனின் சக்தியைப் பாடுங்கள்!! அவ்வாறு வாழ்த்தினீரேல் இவ்வுடல் நிலைபெற்று விளங்கும்போது முத்திநெறியை உணரும் ஜீவன்முக்தி நிலையை அடைவீர்!!"


-- மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...