ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 10:
"போதனை போதாத புல்லறிவாளறன்றோ
சோதனை செய்திடும் தெய்வமென்பார் இவ்வுலகில்
வாதனை தீர்க்கவந்த மாகருணை மெய்ப்பொருளோ
வேதனை செய்யும் இங்கு விட்டிடுவீர் இம்மடமை
பார்தனிற் பக்தர் தமை காக்க வந்த கற்பகத்தை
நாதனைப் பாகமதில் வைத்திட்ட மாதுமையை
மாதினை மார்பணிந்த செம்மாலின் பின்னாளை
மேதினியில் மெய்மறந்து பாடேலோர் எம்பாவாய்!!"
விளக்கம் :
"கஷ்டகாலம் நேரும் போது தெய்வம் சோதிக்கிறது என்று கூறுவது உலக வழக்கம்!! நாம் செய்து கர்மவினைகளே நமக்கு நன்மை தீமைகளாகி வருகின்றதே அன்றி, தெய்வம் தனியாக சோதிப்பதில்லை!
சாஸ்த்ரங்களை உணராதவரன்றோ தெய்வம் சோதிக்கிறது எனக்கூறுவர் இவ்வுலகில்!! தெய்வத்திற்க்கெல்லாம் தெய்வமாகி தாயாய் விளங்கும் ஶ்ரீகாமாக்ஷி என்றும் தன் குழந்தைகளை சோதிப்பது இல்லை. தன் மகவிற்கு வரும் கஷ்டங்களைக் குறைத்து, கர்மவினைகளை ஒழித்து அருள்பவள் பராசக்தி!!
ப்ரஹ்மதேவர் கைவிரல்களால் எழுதிய தலை எழுத்தை, ஶ்ரீகாமாக்ஷி தனது கால் விரல்களால் அழித்து விடுவாளாம்!! எனில் அனைவர்க்குமன்று!! அஸஞ்சலமான பக்தியேடையோர்க்கே!! ஒரு கணம் கூட நீங்காத தேவி ஸ்மரணை உள்ளவருக்கு விதியும் மாறும்!! காலமும் அவன் கட்டுக்குள் வரும்!! அவன் அடைய முடியாதது இவ்வையத்திலே ஒன்றுமில்லை!!
இத்தகைய மாகருணை வாய்ந்த அம்பிகையை ஸதா ஹ்ருதயத்தில் பாவிப்பவருக்கு, ப்ரளயகாலாக்னியும் கற்பூர நீராஜனம் செய்யும் என்பார் சங்கரர்.
பிறவி எனும் மாபெரும் வ்யாதியை தீர்க்க வந்த கருணை மிகுந்த மெய்ப்பொருளானவள் ஶ்ரீபராசக்தி.
அவளா துயரமளிப்பாள்!! அவளே துயரங்களை அழித்தொழிப்பாள்!! அம்பிகை சோதிப்பாள் எனும் எண்ணத்தை விட்டொழித்து விடுவீர்!!
இவ்வுலகிலே பக்தர்களை காக்க வந்தருள் புரியும் கல்பகவல்லியை,
சிவனாருக்கு தன்னுடைய ஒரு பாகத்தை அளித்தருளிய உமா தேவியை (ப்ரஹ்மாண்ட புராணம் ஈசன் தவமிருந்து அம்பிகையின் பாகம் பெற்றதைக் கூறும்!!)
மஹாலக்ஷ்மியை மார்பிலணிந்த திருமாலின் தங்கையாகத் தோன்றிய பராம்பிகையை (வாஸ்தவத்தில் நாராயணனுக்கும் தாயாராய் இருந்தாலும், தங்கையாகவும் அவதரித்தாள் அம்பாள்!!)
ஶ்ரீகாமாக்ஷி அம்பாளின் மஹிமையை இம்மேதினியில் மெய்மறந்து பாடுவீர்களாக!!
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment