Sunday, 20 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 11:



"வாணாட்சி காணண்னை மன்னுலகில் லீலையாய்

காணாட்சி செய்யும் அரியாசனத்தில் அமர்ந்து

தானாட்சி செய்யும் தென்மதுரை மாநகரில்

மீனாட்சியாய் வந்த மாதா மனோன்மணியை

தானாட்சி செய்தும்மை பாழ்நரகில் வீழ்த்திடும்

ஊனாட்சி செய்யுமமது உள்ளத்தில் வைத்திட்டு

யானாட்சி செய்து மல ஆணவம் நீத்தீரேல்

வாண்ட்சி காணலாம் என்றேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"ஶ்ரீமந்நகர நாயிகையான பராசக்தி அனேக கோடி ப்ரஹ்மாண்ட ஜனனி!! ஶ்ரீபுர மத்யத்தில் விளங்கும் காமலோசனாம்பாள், உலகங்களையெல்லாம் பரிபாலிக்கும் வண்ணம் ப்ரஹ்மாண்டங்களுக்கு மத்தியில் விளங்கும் மஹாமேருவின் உச்சியிலும் விளங்கி நிற்பாள். ஆதிசக்தியான ஶ்ரீகாமாக்ஷி தேவி உயிர்களிடத்து அபிமானம் கொண்டு கரும்புவில்லும், மலர்க்கணையும் ஏந்தி மலயத்வஜபாண்டியனுக்கு மூன்று வயது மகவாய் அயோநிஜையாகத் தோன்றினாள்!!


மலயத்வஜனுக்கு மகவாய் அவதரிக்கும் முன்பே ஶ்ரீமீநாக்ஷி தேவியை இந்த்ரன் மரகத ரத்னத்தாலான சிலாரூபமாக ப்ரதிஷ்டித்துவிட்டதாக புராணங்கள் கூறும்!! ஆயினும் த்ரிபுரஸுந்தரியான ஶ்ரீமீநாக்ஷி மீள மலயத்வஜனுக்கு மகவாய்த் தோன்றி நின்றாள்!!


வாணாட்சியை விட்டுவிட்டு, ஶ்ரீகாமாக்ஷி தேவி மண்ணுலகை ஆட்சி செய்ய ஶ்ரீமீநாக்ஷியாய்த் தோன்றினாள். பாண்டிய வம்சத்து அரியணையில் அமர்ந்து, பாண்டிய குலத்திற்கே நீங்காத புகழளித்தாள். ஶ்ரீசக்ரத்தின் வடிவில் விளங்கும் தென்மதுராபுரியிலே ஶ்ரீபுரத்தில் ஜ்வலிப்பது போலே அம்பாள் அரசாட்சி செய்தாள்.


அவ்வாறு விளங்கிய தேவி "மஹா மனோன்மனி" பீடமாம் மதுரையில் ஶ்ரீசக்ர பிந்துவில் கொலுவீற்றிருந்து அருள்கிறாள்.


அப்படி மீநாக்ஷியாய் விளங்கும் காமாக்ஷியை, பஞ்சேந்த்ரியங்களாலும் அல்லலுற்று புலன்கள் இழுக்கும் வழியில் சென்று மீளாத் துயரை அடைந்து விடாமல், ஹ்ருதயத்தாமரையிலே என்றும் அவளை வைத்து பூஜிப்பீர்களாக!!


ஶ்ரீமீனலோசனையான அம்பாள் கொலுவீற்றிருந்து அருளும் ஹ்ருதயத்திலே பாபங்கள் நெருங்காது!! ஆணவாதி மலங்கள் அழிந்து படும்!! ஆதிசக்தியான இவள் வடிவை த்யானித்த பொழுதில் முக்தியும் சித்திக்கும்!!


அப்படி முக்தியடைந்து இன்புறுவீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...