Sunday, 20 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 12:



"பொருள் நிறைவோ தேட இங்கு புறப்பட்டு வந்தீர்

அருநிறைவைத் தேடவோ அங்கிருந்து வந்தீர்

இருநிறையும் ஏழையரே உய்யும் வகை கேளீர்

கருணைவடிவாகியொரு காஞ்சியெனும் ஊரில்

அருணர் சதகோடி என ஜோதியொளி வீசும்

சரணுடைய தாயொருத்தி தஞ்சமென்றோர்க்குத்

அருநிறைவும் ஆங்கே பொருநிறைவும் சேர்த்து

தருமணியாய் காத்துள்ளாள காணேலோரெம்பாவாய்"


விளக்கம் :


"யத்ராஸ்தி போக நச தத்ர மோக்ஷ:

யத்ராஸ்தி மோக்ஷ நச தத்ர போக:

ஶ்ரீஸுந்தரி ஸாதக புங்கவானாம் போகஸ்ச மோக்ஷஸ்ச கரஸ்த ஏவ!!"


என்பது தந்த்ர வசனம்!! அம்பாளை உபாஸிக்கும் பக்தர்க்கு அருளும் பொருளும் நிறைந்தே கிடைக்கும் என்பது அவள் கருணை!!


பொருள் நிறைவைத் தேடி அம்பிகைத் தொழுபவர் பலர் உண்டு!! ஶ்ரீமதாச்சார்யாளும் அம்பாளைக் கூறும் போது, அஞ்ஞானத்தை ஒழிப்பவள், கல்வியறிவை அளிப்பவள், என்றெல்லாம் கூறிவிட்டுப் பின்னரே முக்தியை அளிப்பவள் அம்பாள் என்கிறார்!!


போகாதிகளை அளித்து, வாழ்வில் நிறைவளித்துப் பின் முக்தியளிப்பவள் ஶ்ரீபராசக்தி!!


அது போல் பொருளை வேண்டினும், பொருட்செல்வம் அளிப்பாள். அருளை வேண்டினும் அருட்செல்வத்தையும் அளித்தருள்வாள் அம்மை!!


அஞ்ஞானம் எனும் இருளால் மூடப்பெற்று விளங்கும் நம்மை விழாமல் காத்தருள்பவள் அன்னை பராசக்தி. நாம் உய்யும் வகை என்னவெனில்,


கஞ்சிநகர் தனிலே, காமபீடத்திலே, கருணை வடிவாகியமர்ந்து, ஆயிரம் கோடி சூரியன்களைப் போல ஒளி பொருந்திய திருமேனியை உடைய ஜகன்மாதாவை சரணமடைவது தான்!!


அப்படி சரணமடைந்தவருக்கு, தாயாய் விளங்கும் பராசக்தி தஞ்சமென்றடைந்தோருக்கு அருள் நிறைவை வழங்கி அருள்பவள்!!


தண்ணருளை பூரணமாய் வழங்கியருள் தயாபரியான அம்பிகை, கீழான பொருட்செல்வத்தை நாம் விரும்பினும் அதையும் அளித்தருளும் பூரணி தயாபரி!! 


இவ்விரண்டையும் அளிக்கும் கருணையுள்ளத்தோடு கஞ்சிநகரில் காமபீடத்திலே ஜகன்மாதா காத்திருக்கிறாள் தன்.குழந்தைகள் தன்னிடத்திலே வந்து சேர்வதற்காக!!


அப்படிப்பட்ட ஶ்ரீகாமாக்ஷி அமபாளை ஸதா ஸ்மரிப்போமாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...