Sunday, 20 December 2020

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 13:



"தாய்க்குச் சுமையாய் தலைகீழாய் வந்துதித்து

பாய்க்குட்கிடந்தழுது பாழுலகிலே வளர்ந்து

ஏய்க்குந்திறனறிந்து எப்பொருளும் தான் கவர்ந்து

பேய்க்கு நிகராகும் பேர்களிடேயே சொரிந்து

நாய்க்குங் கடையாகி நாடு நாடாய் அலைந்து

நோய்க்கே இரையாகும் பொய்வாழ்வு தாயேயுன்

சேய்க்கு வரலாமோ வாராது காத்தருள்வாய்

தாய்க்கும் பெருந்தாயாய் வந்தேலோர் எம்பாவாய்"


விளக்கம் :


"பூமியில் பிறக்கும் பொழுது கொடுமையான வேதனையை தாயாருக்கு அளித்துக்கொண்டே தலைகீழாகவே பூமியில்  பிறந்து,


பாயில் கிடந்து, பல சேஷ்டைகளைச் செய்து அழுது, பாழான இவ்வுலகிலே வளர்ந்து,


அடுத்தவரை ஏய்க்கும் திறனைக் கண்டு அறிந்து, பொருளீட்டுவதற்காக பல மாறுபாடுள்ள தவறான வழிகளையும் கொண்டு,


பேய்க்குச் சமமான மக்களுடன் வீணே பழகி, நல்லோரைப் போல் நடமிடும் தீயோரைக் கண்டு, மயங்கி, அவர் பின்னே சென்று, மீறாத் துயருற்று,


நாயை விடவும் கடையனாகி, ஊர்கள் தோறும் அலைந்து, வருந்திப்


பின் பாழான நோய் ஏற்பட்டு, இவ்வாழ்வு நோயினாலே கரையும் வண்ணம் துக்கமும் ஏற்ப்பட்டு, அதன் விளைவாய் மரணமும் தோன்றும் படி


இத்தகைய துயரமும், பராசக்தியான அம்பிகையே, இத்தகைய பொய் வாழ்வு உன் அடியார்களுக்கு வரலாமா!!?


உன் பிள்ளைகளான எங்களை இத்தகைய கொடுமையான பொய்வாழ்வு வாராமல் காத்தருள்வாய் அம்மா!!


தாய்க்கெல்லாம தாயாய் விளங்கும் பெருந்தாயே!! தயாபரியே!! உமையே!!


தாயினும் நல்லாள் என்பது அம்பிகை நாமம்!!! ஸஹஸ்ரநாமமும் அம்பாளை ஶ்ரீமாதா எனக்கூறுவதைக் காண்க!!


மேலும் அயி, விதாத்ரி, ப்ரஸவித்ரி, அம்பா, அம்பிகா, ஜனனி, மாதா என மறுபடி மறுபடி கூறுவதைக் காண்க!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...