ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 14:
"பெருங்காரியம் போல் பிறந்தீர் உலகில்
அருங்காரியம் நீர் புரிந்ததென்ன சொல்வீர்
குரங்காய்ப பிறந்தீர் கிடந்தீர் தவழ்ந்தீர்
பெருங்காண் நடந்தீர் தளர்ந்து பிணமானீர்
ஒருங்கே வருவீர் நீர் உய்யும் வகை கேளீர்
சிரங்கை குவித்தம்மை சீர் பாடித் தாளை
நெருங்கி மலர் தூவி நித்த நிலை நாடி
இருங்கோள அருள்வருமே தாலேலோர் எம்பாவாய்!!"
விளக்கம் :
"ஏதோ சாதித்து விட்டதைப் போல இவ்வுலகிலே பிறந்தோம்!! உலகிலே பிறந்து நாம் செய்த சிறந்த காரியம் என்ன!!?
பிறந்தோம், தவழ்ந்தோம், வளர்ந்தோம், படித்தோம், மணந்தோம், பிள்ளை பெற்றோம், பின் அவற்றை வளர்த்தோம், இறுதியில் மாண்டோம்!!
விலங்கினங்களும், பறவைகளும் கூட இக்காரியத்தைச் செய்கின்றனவே!! இவைகளுக்கு மாறாக நாம் மனிதராய்ப் பிறந்து இவ்வுலகில் சாதித்தது என்ன!!?
வாணாள் முழுதும் வீணாகியே போகிறதல்லவா!!? இவ்வாழ்நாளை பயனுறும்படி செய்ய வழியொன்று உண்டாகில், அது ஜகதம்பிகையாகிய பராசக்தி காமாக்ஷியைக் கண்டு வணங்குவதேயாம்!!
தேவியின்.ஆலயமாம் காஞ்சிப்பதிக்குச் சென்று, ஶ்ரீராஜராஜேச்வரியான பகவதி காமேச்வரியை, தலையின் மேல் கைகுவித்து,
அம்மையின பெருமை தனைப் பாடிப் புகழ்ந்து, இருதிருவடிகளை வணங்கி, அம்பாள் பாதத்திலே மலரைத் தூவி, முக்தி நிலையைப் பாடி,
அவளின் திருவடியிணையை மறவாதிருந்தால் முக்தியும் கைமேலாம் என்பநை உணரவீராக!!
ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம
ஶ்ரீமாத்ரே நம:
லலிதாம்பிகாயை நம:
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment