Sunday, 20 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 15:



"ஊருமே மெய்யல்ல உற்றாரும் மெய்யல்ல

பேருமே மெய்யல்ல பெண்டீரும் மெய்யல்ல

நீருமே மெய்யல்ல நும்மக்கள் மெய்யல்ல

பாருமே மெய்யல்ல பலநிதியும் மெய்யல்ல

கோரும் நிதிஈயும் கற்பகமே தஞ்சமென

சாரும் அடியார்க்குத் தாயாகி காமாக்ஷி

யாரும் அறியாது ஆண்டருளுந் தன்மையினால்

நேருஞ்சுகமொன்றே மெய்யேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


இவ்வுலகம் மெய்யல்ல!! ஸித்தாந்தங்களில் அத்விதீயம் என்பது உயர்ந்த ஸித்தாந்தம் என்பது ஶ்ரீசங்கரபகவத் பாதாள் காண்பித்த வழி!! அத்விதீயமான மோக்ஷத்தை அனுபவத்திற்குக் கொண்டு வரும் வழி சாக்த தந்த்ரங்களே!!


ப்ரஹ்மவித்யோபாஸனையினால் ஆத்மவிசாரம் செய்து, வாஸனாதிகளை தொலைத்து, ஞானமடைந்து, முக்தியடைவதென்பது அனைவர்க்குந் துர்லபம்!! 


அத்வைத மோக்ஷத்தை துல்யமாக அனுபவத்திற்கு கொண்டு வரும் வழியை சாக்த தந்த்ரங்கள் கூறுகின்றன. ஏனைய சமய உபாஸனைகள் த்வைத பாவத்தைக் கொண்டிருப்பினும், தசமஹாவித்யா தந்த்ரங்களாயினும் தக்ஷிணகாலி முதல் கமலாத்மிகா வரையிலும் அத்தனை குல உபாஸனையிலும் இறுதி நிலை அத்வைத முக்தியே!!


சாக்தத்தின் நிலை மூர்த்தி பேதத்தினை பொறுத்து மாறாது என்பது சாக்தத்தின் தனிச்சிறப்பு!! உபாஸிக்கும் மூர்த்தம் காமாக்ஷியாயினும், காளியாயினும், தூமாவதியாயினும், துர்கையாயினும், சின்னமஸ்தாவாயினும் இறுதி நிலை அத்தேவதையுடன் ஒன்றிவிடுவதே!!


ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமா முழுக்க முழுக்க அத்வைத நிலையைக் கூறுவதைக் காண்க!!


சாக்தத்திற்கும் அத்வைதத்திற்கும் ச்ருஷ்ட்டியில் வேறுபாடு உண்டே தவிர்த்து லயத்தில் வேறுபாடு இல்லை!! இறுதி நிலையை இரண்டும் ஒன்றாகவே கூறுகின்றது!!


ஶ்ரீகாமாக்ஷி தாஸர் அதையே இங்கு கூறுகின்றார்!!


இவ்வுலகில் அனைத்தும் மாயைத் திரையாலே மூடப்பெற்று விளங்குகின்றது. ப்ரஹ்மாதி மூர்த்தங்களும் மாயையினாலே ச்ருஷ்ட்யாதி கார்யங்களைச் செய்கின்றனர் எனில் அவர்களும் நிலையில்லாதவர்களே!!


மாயையால் பொய்யானதால், இவ்வுலகம் மெய்யல்ல!! பொய்யே!!


உற்றாரும் மெய்யல்ல!! பொய்யே!! கணந்தோறும் மாறக்கூடிய உலகில் சொந்தங்களும் மாறுகின்றன அல்லவா!!


பேருமே மெய்யல்ல!! இறந்த பின்னர் இப்பெயரும் அழகிறது அல்லவா!!? பேரும் பொய்யே!!


பெண்டீரும் மெய்யல்ல!! கணவன் மனைவி எனும் பந்தமும் இறப்பு வரையே!! அதன் பின் அதுவும் பொய்யே!!


நாமும் மெய்யல்ல!! இவ்வடலாயினும், மனதாயினும் அனைத்தும் அழிந்துவிடுவதால் நாமும் மெய்யல்ல!! பொய்யே!!


நமது குழந்தைகளும் இந்த பிறவியுடன் தொடர்பு முறிந்துவிடுவதால் அவர்களும் மெய்யல்ல!! பொய்யே!!


இவ்வுலகும் மெய்யல்ல!! செல்வங்களனைத்தும் மெய்யல்ல!! பொய்யே!!


பின்.எது மெய்!!?


கேட்கக்கூடிய அனைத்தும் அளித்து காஞ்சிநகர் வாழும் காமக்கோட்டமுறையும் கற்பகவல்லியாம் ஶ்ரீகாமாக்ஷி பராம்பாளின் திருவடியே தஞ்சம் தஞ்சமென்று வேதங்கள் அம்பாளின் பாதத்தில் விழுந்ததைப் போல

"துர்காந் தேவீஹும் சரணமஹம் ப்ரபத்யே!" என்றும் "தாம் பத்மினீம் ஈம் சரணமஹம் ப்ரபத்யே!" என்று காமாக்ஷி பாதத்தினை சரணமடையும் பக்தருக்கு தானே தாயாகி விளங்குவாள் அம்பாள்.


அங்ஙனம் ஶ்ரீமாதாவான பராசக்தி பேதித்து நமை வளர்த்தெடுக்கும் பெய்வளையாகி, நம் ஆணவாதி மலங்களையெல்லாம் ஒழித்து, நம்மை சுத்தனாக்கிப், பின் முக்தனாக்கி, ஜீவன் முக்தியையும் வழங்கி அருள்கிறாள். அத்தகைய கருணையுடன் ஶ்ரீகாமாக்ஷி அம்பாள் அளிக்கும் முக்தியொன்றே மெய் என்பதை உணர்வீர்களாக!!


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

1 comment:

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...