ஆஷாட நவராத்திரி ஸ்பெஷல் !
#வாராஹி_திருநட்சத்திர_மாலை
காப்பு
சிந்தா மணிக்கிருகத் தேர்வாசல் வாசம்செய்
நந்தா மணிவிளக்கு நாயகியாள்- முந்துபடை
"வாராஹி தாரக அந்தாதி " நான்பாடக்
காரானை பொற்பாதம் காப்பு
நூல்
உலகம் நிலையாய் உருளப் புரிந்தே உதவியவள்
கலகம் எதுவும் கழல்பணி பக்தன் கதவிருந்து
விலகும் படிக்கு விதிக்கும் அசுவதி வித்தகியாள்
இலகும் நலத்தாள் இதம்புரி வாராஹி ஏத்துவமே! 1
ஏத்துப் புரக்கும் இனிய தளபதி, ஏற்புடனே
காத்துக் கருப்பால் கலங்கா திருக்கும் கதிதருவாள்
யாத்த கவிதை அனைய ஒழுங்கினில் அன்பரணி
பூத்துச் சிரிப்பாள் பொருந்திடும் வாராஹி பூரணியே 2
அணியாய் இருகரம் அங்குச பாசம் அமைந்திருக்கப்
பணியார் தமையே பயப்படச் செய்யும் படைகளுடன்
திணியார் வலிமை திருக்கார்த் திகையொளித் தேசுடனே
துணையாய்த் தொழுவோர் சுகம்பெற வாராஹி தோற்றுவளே! 3
தோற்றும் சிரசில் உரோகிணி காந்தன் சுடர்விடவும்
ஊற்றும் பசுமை உடல்நிற மாக ஒளிவிடவும்
ஏற்றும் விழிகள் எரியும் கனிவும் இழைத்திடவும்
ஆற்றும் அழகில் அமர்கிறாள் வாராஹி ஆனந்தமே! 4
ஆனந்தம் நல்கும் அருளுடை அம்பிகை , அற்புதமாய்த்
தானந்த மான மிருக சிரத்தாள் சதுர்புஜத்தாள்
ஏனிந்த வண்ணம் எதிர்த்தோம் எனவே எதிரிகளும்
வானந்தம் காணவைப் பாளெங்கள் வாராஹி மாணிக்கமே! 5
மாணிக்கக் கண்கள் மரகத மேனி, வராஹமுகம்
ஆணிப்பொன் மேனியன் ஆதிரை யானும் அதிசயிக்கப்
பேணிக்கொண் டுள்ள பெருநெடுந் தோள்கள்,, பிறைநகங்கள்
காணக்கண் கோடியும் வேண்டும்நம் வாராஹி காண்பதற்கே! 6
காண்பதற் கிங்கே கடுமை எனவே கருதுபவர்
மாண்புப் புனர்வசு மன்னவன் வில்லம்பில் வந்திடினும்
தீண்டும் கடுமைகொள் தேவனென் றேமனம் சிந்திப்பரோ
பூண்பலா போன்றநற் பொற்பினள் வாராஹி போர்மகளே! 7
போர்மகள், ஞானப் புகழ்மகள், வேதப் புனிதமெலாம்
தேர்மகள் செம்மஞ்சள் பூசம்பந் தத்தினள் சேர்சினத்தில்
வேர்வரை சென்றே எதிரியை வீழ்த்தும் வினைகளிலே
நேர்மகள் வீரம் திகழ்மகள் வாராஹி நேசத்தளே! 8
நேசத்தள் ஆயிலி யம்திரு நெஞ்சத்தள், நேருமுப
தேசத்தில் பாசத்தள், சேர்மணி தீபத் திருநகரில்
வாசத்தள், அன்பு வடிவத்தள், மாறி மறித்துநிற்கும்
நீசத்தை வீழ்த்தும் நியாயத்தள் வாராஹி நிர்மலையே! 9
(ஆயிலி - தாய்வழிப் பிறவாதவள்)
மலைகளும் தோற்கும் மதர்த்த வடிவாள் மறித்திடும்போர்க்
கலைகளும் தாமகம் கண்டே சுருதிக் கழல்பணியும்
அலைகடல் பொங்கி அலைப்ப தெனவரும் ஆழ்துயர
வலைகளைப் பிய்த்தே எறிவள்நம் வாராஹி வாழ்வளித்தே 10
அளித்திடும் வெற்றி அவள்பதம் என்றே அறிந்துகொண்டு
களித்திடும் அன்பர் கனிவுடன் கற்பூரம் காட்டிடுவார்
வளைத்திருள் வந்திடும் மாலை கழிந்த வளரிரவில்
திளைத்து வணங்குதல் செய்கநம் வாராஹி தெய்வத்தையே 11
தெய்வத் திருபஞ்ச பாணத்தில் தோன்றிச் சிறப்புடனே
செய்ய கிரிசக்ரத் தேர்ரதம் ஊரும் திரிநயனி
எய்தும் விவாதத் தெதிரி ஜெயக்கொடி ஏற்றிடுமுன்
உய்வளிப் பாளன்பர்க் கூட்டுவள் வாராஹி உத்தரமே 12
உத்தரம் போலே உறுதியிற் காத்திடும் உத்தமியாள்
பத்திர மாகப் பயங்களைப் போக்கிப் பரிசளிப்பாள்
அத்தமும் ஆதியும் ஆகியே தம்மரும் அத்தங்களில்
அத்திரம் ஏந்தி அருளுவள் வாராஹி ஆதரித்தே! 13
ஆதரித்(து) ஆக்கம் அளித்தே புரப்பவள் ஆயசக்தி
மாதரில் ஐந்தாம் வரிசை பெறுபவள், வாஞ்சையுடன்
ஓதரும் ஞானம் உதவும் வி சித்திரை, ஒப்பரிய
சாதகம் நல்கிடும் தந்திரம் வாராஹி சாதிப்பளே! 14
சாதிக்க வேண்டும்சொல் தர்க்கத்தில் என்கிற தாகமுளோர்
வாதிக்கும் துர்நச்சு வாதி பயந்து மயங்கிடவே
ஆதிக்கம் நல்கிடும் வார்த்தாளி போற்றி அடிபணிந்தால்
சோதிக்கும் போது துயரற வாராஹி தோன்றுவளே 15
தோன்றும் வடிவும் சொலமுடி யாத தொகைவகையாய்
ஊன்றும் பயிரவி சாகம் பரியென உண்டுபல
ஆன்ற திருப்பெயர் அன்பர்கள் பாடி அடிபரவ
மூன்று திருவிழி யாள்நிறை வாராஹி முன்னிற்பளே! 16
முன்னிடும் அந்தினி ரும்பினி ஜம்பினி மோஹினியாள்
மின்னலாய்ப் பாய்ந்து விசுக்கிரன் தன்னையே வீழ்த்தியவள்
மன்னிடும் காம னுடம்பெரி செய்த மலைச்சிவனும்
நன்னய மாய்ப்புகழ் நல்கிடும் வாராஹி நாயகியே! 17
அனுடம்
நாயகி, பஞ்சமி நற்தண்ட நாதா நலமருளும்
தாயகி வார்த்தாளி பஞ்சமி தாக்கிடும் , சண்டையிலே
போயெதிர் நின்று பொருது நம் கேட்டைப் பொசுக்கிடுவாள்
ஆயநற் செல்வம் அளித்திடும் வாராஹி ஆரமுதே! 18
ஆரமு தேயென அன்பர் தொழுதே அகமகிழ,
சேரமு தாகத் திகழ்கிற ஆக்ஞா திகிரியிலே
ஓரமு தாக மனத்தை அடக்க உதவிடுவாள்
பேரருள் மூலப் பிழம்பவள் வாராஹி பேசுவளே! 19
பேசுவள் சொப்பனப் போதில் மிகுந்த பொலிவுடனே,
வீசுவள் பூராடம் பத்தில் கருவம் மிகுந்தவரை
பூசுவள் வெற்றிப் பொடியள்ளி, உண்மைப் புனிதமிலா
மாசுகள் நீங்கிய நெஞ்சினில் வாராஹி வாழுவளே! 20
(குறிப்பு- பூரா டம்பத்தில் )
வாழும் பொழுதினில் வந்தடி வீழும் மனிதருக்குச்
சூழும் நலங்கள் தொகுத்துக் கொடுப்பாள், துணையிருப்பாள்
ஊழில் அலுத்திருத் ராஷாடத் தம்மையை உள்தொழுவீர்
ஆழ நினைப்பீர் அரியநம் வாராஹி அன்னையையே!! 21
(உத்திராஷாடம்– உத்திராடம் – ஆஷாடம் –ஆடிமாதம்)
அன்னை, வராஹன் அருந்திரு வோணன் அரியவனாய்
முன்னைப் புவியைக் கடலடி மூழ்கி முகந்தெடுத்தாள்
தன்னை வணங்கிடும் பக்தர்கள் சங்கடம் தானழித்தே
அன்னது மீளா தருளுவள் வாராஹி ஆட்படவே 22
படவிட்ட வட்ட பலவிட்ட சக்கரப் பாதையிலே
விடவிட்டு விட்ட விதியட்டுத் தீய வினைதடுப்பாள்
படைமுட்டு தீமை பலப்பட்ட போது படையெடுத்தே
உடைபட்டுப் போக ஒழித்தவள் வாராஹி உத்தமியே! 23
உத்தமி, எல்லா உலகும் பயந்தே உதறும்படி
சத்தமிட் டேவந்த ரக்தபீ ஜன்தனைத் தண்டித்தவள்
புத்திகெட் டேநஞ் சதையம் மதுவாய்ப் புகலுகிற
பித்தினை வீழ்த்திப் புரந்திடும் வாராஹி பேரருளே 24
பேரரு ளாட்டி, பதின்மூன்றும் நூறும் பிழையறவே
யாருரைப் பாரவர் முன்னே மகிழ்வாய் அவள்நடப்பாள்
சீரற வெற்பூரட் டாதி தருமம் செழிக்கவைத்த
காரணி, பாதம் கருதுக வாராஹி காப்பதற்கே!
குறிப்பு: வெற்பூர் அட்டு ஆதி தருமம் செழிக்க) ` 25
காசுக் கெனவே கழிகிற வாழ்வில் கதித்துவரும்
மாசுத் திரட்டாதி மாயப் புரிந்து மறுகுடலில்
வாசம் தவிர்த்திடும் மாமணிப் பாதம் மனம் நினைந்து
பூசை புரிக, புகழ்நிறை வாராஹி போற்றிடவே! 26
(குறிப்பு: மாசுத் திரட்டு ஆதி மா சே
போற்றுவ ரேவதி யும்படி நெஞ்சில் புகலுவரே
ஏற்றுவரே மனம் எண்ணுவ ரே உள் இழிவுகளை
மாற்றுவ ரே யவள் மாணருள் நெஞ்சிடை மாந்திடுவர்
ஆற்றும் அருளால் அடைவர்பின் வாராஹி ஆளுலகே !27
நூற்பயன்
வாராஹி தாரக மாலையை நெஞ்சிலே
ஆரா தனைசெயும் அன்பர்க்கே- நேரான
உச்சப் பரிசாம் உயர்முக்தி தானளிப்பாள்
இச்சக்திக் கில்லை இணை!
அம்பிகையின் திருவடிகளில் சரணம்....
No comments:
Post a Comment