Sunday, 20 February 2022

ஸ்ரீ காமாக்ஷி அகவல்

 காமாக்ஷி ஆவிர்பாவ தினம் !

மாசி பூரம் ஸ்பெஷல் !


ஸ்ரீ காமாக்ஷி அகவல்


#காப்பு:


ஜகத்திருள் நீக்கும் காஞ்சி க்ஷேத்ரம் தனில்

மகத்துவம் மிகுந்த சக்தி மனோன்மனீ காமாக்ஷி தன்மேல்

அகத்திருள் நீங்கும் வண்ணம் ஓர் அகவற் பாமலை ஓத

முகத்திருள் நீக்கும் யானை முளரி மாமலர்த்தாள் காப்பே


#அகவல்:


ஓம் நமோ பகவதி உத்தமி கவுரி

சாம்பவி மனோன்மனீ சங்கரி பயங்கரி

வெண்தலை மாலை விமலி எண்தோளி

பஞ்சாக்ஷரத்தி பரப்ரம்மசொரூபீ

எஞ்சாகரத்தி இன்பத் தாண்டவீ

ப்ரணவ சொரூபம் பெற்றிடும் வீரி

சரணாம்புயத்தி ஸர்வஸம்ஹாரி

தத்துவப் பொருளாய் தழைத்த நன்மணி

அத்தி முகவனை அளித்த கண்மணி

சிறுவிதி மகவாய் சிறந்த சிவமணி


ஒருதனி முதலாய் ஓங்கும் தவமணி

வரைமகள் எனவே வளர்ந்த நவமணி

பரையென நாமம் பகர்ந்தவர் பவப்பிணி

அகற்றி ஆட்கொள்ளும் அற்புத ஒளியே

சிவ சிவ சிவ சிவ சிவசங்கரியே

நவவடிவாகிய நாராயணியே

ஆதிஅனாதியும் அந்தமும் நீயே

ஜோதி சுடராய் சூழ்ந்தவள் நீயே

தந்தை தாயுமாய் தழைத்தவள் நீயே

இடை பிங்கலையில் இருப்பவள் நீயே


கடை சுழுமுனையில் கலப்பவள் நீயே

முச்சுடராகி முளைத்தவள் நீயே

உச்சுக்கு வெளியில் உலவுபவள் நீயே

மூலத்தில் நின்ற முதல்வியும் நீயே

ஜாலங்கள் புரியும் சமர்த்தியும் நீயே

ஓரெழுத்தான் ஒலிவெளி நீயே

ஈரெழுத்தான் ஈச்வரி நீயே

மூவெழுத்தான முக்கண்ணி நீயே

நாலெழுத்தான நாயகி நீயே

அஞ்செழுத்தான அம்மணி நீயே


பஞ்சக்ருத்தியம் படைத்தவள் நீயே

ஐவராம் கர்த்தர்கு அன்னையும் நீயே

ஐயாறு மூவேழு அக்ஷரீ நீயே

அருவுருவான அற்புதம் நீயே

குருவாய் விளங்கும் கோலமும் நீயே

சின்மயமாக செறிந்தவள் நீயே

தன்மயமாக தனித்தவள் நீயே

வேதாந்தமான விளைவும் நீயே

நாதாந்தமான நவரசம் நீயே

வேற்றுமை இல்லா வித்தகி நீயே


நாற்பத்து முக்கோண நாயகி நீயே

அரனொடு அரியாய் அமர்ந்தவள் நீயே

பரனொடு பரையாய் பதிந்தவள் நீயே

மோன பாத்திர முடிவும் நீயே

ஞான க்ஷேத்திர நவநிதி நீயே

நடுநிலையான நாயகம் நீயே

கொடுவினை மாற்றும் குண்டலி நீயே

சுத்த சிவமாய் ஜொலிப்பவள் நீயே

சத்தி சிவமாய் சார்ந்தவள் நீயே

சுகஸ்வரூபீ சூட்சியும் நீயே


அகண்டபூரணம் ஆனவள் நீயே

வேலனை ஈன்ற விளக்கொளி நீயே

வாலைத் திருமகள் வாணியும் நீயே

கன்னிகையாம் சிவகாமியும் நீயே

அன்னையாம் வடிவம்மையும் நீயே

ஆட்சி நீலாயதாக்ஷியும் நீயே

சூட்சி சிவகமலாக்ஷியும் நீயே

நாரணியாம் மீனாக்ஷியும் நீயே

ஆரணியாம் விசாலாக்ஷியும் நீயே

கன்னிகள் பத்திரகாளியும் நீயே


மன்னும் துர்கை மாரியும் நீயே

எந்திர வித்தைகள் எல்லாம் நீயே

மந்திர ஸ்வரூப மௌலியும் நீயே

மாய குண்டலி மனோன்மனீ நீயே

ஆயிரம் நாமம் ஆனவள் நீயே

ஆனந்த வடிவாய் அமைந்தவள் நீயே

மனவாக்கடங்கா மகமாயி நீயே

ஸர்வ ஸம்ஹார சக்தியும் நீயே

ஸர்வானுக்ரஹ ஸமர்த்தியும் நீயே

எண்ணும் மனதில் இருப்பவள் நீயே


மண்ணுயிர்க்குயிராய் மருவிய தாயே

அகிலாண்டவல்லி அம்பிகையாளே

மஹிமே சேர் கச்சி மாநகராளே

கனகம் பொழி திருக்காமக்கோட்டத்தி

மனங்கவர் காயத்ரி மாமண்டபத்தி

ஓங்கார கோணத்தில் ஒளிர் பத்மாஸனத்தி

நீங்காத நீல நிறத்தி சதுர்புஜத்தி

காணரும் பிலாகாச பீடத்தி கன்னி

சேனுயர் துவஜ சிகர கோபுரத்தி

தகவுறு தர்ம ஸந்தான ஸ்தம்பத்தி


திகழறத்தி பஞ்ச தீர்த்த பூதத்தி

வெற்றி ஸ்தம்பம் விளங்குமாலயத்தி

பற்றற்றவர் பணி பொற்பதத்தி

தலம் புகழ் சங்கராசாரியர் என்னும்

வலம் புரிந்தேத்தி வன்மையோ இன்னும்

ஒருபுடை மருவ உளம் மகிழ் நீலி

திருமகள் கலைமகள் தினம் தொழும் சூலி

காமக்கண்ணி கவுரி கமலாக்ஷி

தாமதமின்றி தந்தருள் காக்ஷி

ஆதரவின்ற அம்மணி உன்றன்


பாதக் கமலம் பணிந்தனன் என்றன்

வேதனை தீர்த்து இவ்வேளை வந்தாதரி

மாதரி வீரி மயான ருத்ரி

சகலரும் போற்றி சந்தோஷமுற்று

சகல சித்தியும் சக்தியும் பெற்று

பக்குவமாக நின் பதமலர் போற்றிட

சக்ரேச்வரியே ஸந்ததம் காப்பாய்

போற்றி போற்றி பொன்னடி போற்றி

ஏத்தி ஏத்தி இறையடி தொழுவாம்

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே

காத்தருள்வாயே காமாக்ஷித் தாயே.


அம்பிகையின் திருவடிகளில் சரணம்!

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...