*#கீதகோவிந்தம்_மஹாகாவ்யம்*
*#ஜெயதேவரின்_அஷ்டபதி_3*
ராதை கண்ணன் மற்றவர்களுடன் சல்லாபம் செய்வதைப் பார்த்து பொறாமை கொண்டு அவனை விட்டு நீங்குகிறாள். ஆனால் அவனை மறக்க முடியாமல் அவனைத் தேடி அலைபவளிடம் அவளுடைய தோழி வந்து அவன் காட்டில் மற்ற கோபிகைகளுடன் வசந்த கால கேளிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதைச். சொல்கிறாள். அந்த அஷ்டபதியைக் கீழே காணலாம்.
அதற்கு முன் ஒரு சந்தேகம் எழுகிறது. ராதைக்கு அவள் அவனை எங்கு விட்டு வந்தாள் என்பது தெரியாதா? அவனைத் தேடி அலைவானேன்?
அவன்தான் மாயாவி ஆயிற்றே . திடீரென்று
மறைந்து விடுவான். இந்த இடத்தில் பாகவதத்தில் காணப்படும் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.
கோபியர் கண்ணன் தங்களுடன் இருப்பதால் கர்வம் கொள்ள அவன் ஒரு கோபியுடன் மறைந்து விடுகிறான். அவள் தன் மேல்தான் அவன் மிக அன்பு வைத்திருப்பதாக எண்ணி தன்னால் நடக்கமுடியவில்லை என்று கூறி தன்னை தூக்கிச்செல்லும்படி கூறுகிறாள். கண்ணன் “சரி, என் தோள் மீதுஏறிக்கொள் என்று கூறி மறைந்து விடுகிறான். அவன் அவனைத் தேடி அலைகிறாள்.
இந்த கோபியைத்தான் பிற்காலத்தில் ராதையாக சைதன்யர் முதலியவர்கள் உருவகப் படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பாகவதத்தில் ராதை என்ற பாத்திரமே இல்லை.
அஷ்டபதி முன்னுரையில் கூறியபடி ராதை ஜீவாத்மா என்று பார்த்தால், ஜீவன் தன் அந்தராத்மாவான பகவானுடன் இணையத் துடிக்கிறது. ஆனால் உலக இன்பத்தில் ஈடுபட்டு அறியாமையினால் ஏற்பட்ட நான் என்ற உணர்வால் அவனைப் பிரிந்து வருந்துகிறது. ஆனாலும் அதன் காரணம் என்ன என்பதை அறியவில்லை.
நாம் உலகில் நம் அறியாமையினால் அவனைப் பிரிந்து வருந்துகிறோம் ஆனாலும் அது அவனுடைய பிரிவினால்தான் என்பதை அறியாது அவனையே குறை கூறுகிறோம்.
இப்போது இந்த அஷ்டபதியைப் பார்க்கலாம்.இதில் உள்ள வசந்த கால வர்ணனை காளிதாசனின் குமாரசம்பவத்தில் சிவன் தவத்தைக் கலைக்க மன்மதன் வரும்போது சொல்லப்பட்ட வசந்த வர்ணனையை நினைவூட்டுகிறது. கவித்துவத்தில் காளிதாசனை ஒத்திருந்தாலும் கண்ணனின் ராசலீலையை சொல்வதால் அதை விட மேம்பட்டதாகிறது.
*லலிதலவங்க லதா பரிசீலன என்ற அஷ்டபதி அடுத்த பதிவில்*.
1.லலிதலவங்க லதாபரிசீலன கோமள மலயசமீரே
மதுகரநிகர கரம்பிதகோகில கூஜித குஞ்ச குடீரே
லலிதலவங்க லதாபரிசீலன- அழகிய லவங்கக் கொடிகளை தழுவி வரும்
கோமள மலயசமீரே – ம்ருதுவான மலய மாருதம் வீசும்
மதுகரநிகர கரம்பித- வண்டுகள் இனிமையாக ரீங்கரிக்கும்
கோகில கூஜித குஞ்ச குடீரே- குயில்கள் கூவும் பூங்காவில்
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
( இந்த வரிகள் த்ருவபதம் என்று சொல்லப் படும் . இவை ஒவ்வொரு ஸ்லோகத்தின் கீழும் காணப்படும் பல்லவி போன்றது.)
ஹரி: - கிருஷ்ணன்
இஹ- இங்கு
விரஹிஜனஸ்ய- பிரிவுற்ற காதலர்களுக்கு
துரந்தே- துன்பத்தைத் தரும்
ஸரஸவஸந்தே- இந்த அழகான வசந்தகாலத்தில்
யுவதிஜனேன ஸமம் – கோபியருடன்
விஹரதி- விளையாடுகிறான்
ஸகி- தோழி
மலையமாருதம் மெல்ல வீசுகிறது லவங்க கொடிகளைத் தழுவி வருவதால் சுகந்தம், வண்டுகளின் ரீங்காரம், குயில்களின் இசை , இவ்வாறு வசந்தம் வர்ணிக்கப படுகிறது. விஹரதி யுவதிஜனேன என்பதால் அவனுடன் இருக்கும் கோபியரின் ஆனந்தமும் விரஹி ஜனஸ்ய துரந்தே என்பதால் அவனைப் பிரிந்து இருக்கும் ராதையின் துன்பமும் தெளிவாகிறது.
2.உன்மத மதன மனோரத பதிக வதூஜன ஜனித விலாபே
அலிகுலசங்குல குஸும ஸமூஹ நிராகுல வகுள கலாபே
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
உன்மத மதன மனோரத – மன்மதனால் உண்டான வேட்கையுடன்
பதிகவதூஜன - விட்டுப்பிரிந்த காதலரால்
வதூஜன- பெண்களுக்கு
ஜனித விலாபே- துக்கத்தை ஏற்படுத்தும்,
அலிகுல சங்குல நிராகுல – வண்டுகளின் கூட்டத்தால் அல்லலுறும்
குஸுமஸமூஹ- புஷ்பகொத்துகளை உடைய
வகுள கலாபே- வகுள மரங்களைக் கொண்ட,( வசந்த காலத்தில்)
வசந்த காலத்தில் காதல் வேட்கை எல்லை மீற வெளியூர் சென்றுள்ள காதலரை நினைத்து பெண்கள் ஏங்குகின்றனர். வகுள மரங்களில் ஏராளமான பூக்கள் பூக்க வண்டுகள் அவற்றை சுற்றி கோலாஹலமாக இருக்கும் காட்சியை இந்தப் ஸ்லோகம் சித்தரிக்கிறது. பிரிந்துள்ள காதலரின் நினைத்த பெண்களின் ஏக்கம் ராதையின் மனதைப படம் பிடிக்கிறது.
3.மருகமத சௌரப ரபஸ வசம்வத நவ தள மால தமாலே
யுவஜன ஹ்ருதய விதாரண மனஸிஜநகருசி கிம்சுக ஜாலே
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
நவதளமால தமாலே- தமால மரங்களின் புத்தம்புதிய தளிர்களின் வரிசை மாலைகள் எனத் தோன்ற
. ம்ருகமத சௌரப ரபஸ வசம்வத- அவைகளின் மணம் கஸ்தூரியை ஒத்து இருந்தது.
கிம்சுக ஜாலே- கிம்சுக புஷ்பங்கள் (சிவப்பு நிறத்தில் வளைவாக இருப்பவை)
யுவ ஜன ஹ்ருதி விதாரண- இளைஞர்களின் ஹ்ருதயத்தை பிளக்கும்
மனஸிஜநகருசி- மன்மதனின் நகங்கள் போன்று இருந்த ( வசந்த காலத்தில்)
4.மதனமஹீபதி கனகதண்டருசி கேஸரகுஸும விகாஸே
மிலித சிலீமுக பாடல படல க்ருதஸ்ம்ரதூண விலாஸே
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
மதனமஹீபதி -மன்மதனாகிய அரசனின்
கனகதண்டருசி- பொன் தடியைப்போல் உள்ள
கேஸரகுஸும விகாஸே- பொன்னிற கேசரி புஷ்பங்கள்
மிலித சிலீமுக- வண்டுகளுடன் கூடிய
பாடல படல-பாடல புஷ்பங்கள் ( கிண்ணம் போன்றவை)
க்ருதஸ்மரதூண விலாஸே- மன்மதனின் அம்பறாத்தூணி என பிரகாசிக்கும்,(வசந்த காலத்தில்)
பாடல புஷ்பங்கள் கிண்ணம் போல இருப்பதால் அம்பராத்தூணி என வர்ணிக்கப படுகின்றன. வண்டுகள் சரங்களாக உருவகப்படுத்தப் படுகின்றன . சிலீமுக என்றால், வண்டு , அம்பு என்று இரு பொருள்.
5.விகலித லஜ்ஜித ஜகதவலோகன தருண கருண க்ருதஹாஸே
விரஹி நிக்ருந்தன குந்தமுகார்த்தி கேதகதந்துரிதாஸே
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
விகலித லஜ்ஜித- வசந்த காலத்தில் மன்மத வேட்கையால் பீடிக்கப்பட்டு வெட்கத்தை விட்ட
ஜகதவலோகன- ஜனங்களைப் பார்த்து
தருண கருண க்ருத ஹாஸே- சிரிப்பதைப்போன்று தோன்றும் வெண்மையான கருண மலர்கள் ,
விரஹிநிக்ருந்தன – விரகத்தால் வாடுபவர் ஹ்ருதயத்தை கிழிப்பதைப் போன்ற
குந்த முகார்த்தி- ஈட்டி ஒத்த முட்களை உடைய
கேதகதந்துரித ஆசே- தாழ்மபூக்களின் வாசத்தால் சூழப்பட்ட திசைகளை உடைய (வசந்த காலத்தில்)
இந்த ஸ்லோகம் கண்ணனைக் குறிப்பதாக உள்ளது. கண்ணன் வெட்கத்தை விட்டு தன்னிடம் ஆசையைத் தெரிவிக்கும் பெண்களைப் பார்த்து கருணையுடன் சிரிக்கிறான் (தருண கருண க்ருத ஹாஸே) தன் ஸ்வரூபத்தை அறியாமல் சாதாரண மானுடன் என்று எண்ணுகிறார்களே என்று.,
6. மாதவிகாபரிமளலலிதே நவமாலிகயா அதிஸுகந்தௌ
முநிமானஸமபி மோஹன காரிணி தருண அகாரண பந்தௌ
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
மாதவிகாபரிமளலலிதே- மாதவிகொடியின் புஷ்பங்களால் பரிமளமானதும்
நவமாலிகயா – மல்லிகையால்
அதிஸுகந்தௌ- மேலும் மணமூட்டப பட்டதும்
முநிமானஸமபி- முனிவர்களின் மனதைக்கூட
மோஹன காரிணி- மயக்கச்செய்வதும்
தருண – இளைஞர்களுக்கு
அகாரண பந்தௌ-இயற்கையிலேயே இனியதும் ( ஆன வசந்த காலத்தில்)
7.ஸ்புரத் அதிமுக்த லதா பரிரம்பண முகுலித புலகித சூதே
பிருந்தாவனவிபினே பரிஸரபரிகத யமுனாஜலபூதே
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
ஸ்புரத் அதிமுக்த லதா- அசைகின்ற மாதவிக்கொடியால்
பரிரம்பண –தழுவப்பட்டு
முகுலித புலகித சூதே – மயிர்க்கூச்ச்சல் அடைந்தது போல மொட்டுக்கள் கொண்ட மாமரங்கள் உடைய
யமுனாஜலபூதே-யமுனையின் நீரால் புனிதமாக்கப்பட்ட
பிருந்தாவனவிபினே – பிருந்தாவனமாகிய காட்டில்
பரிஸர பரிகத –அன்பு கொண்டவர்களால் சூழப்பட்டு ( வஸந்தகாலத்தில் கண்ணன் விளையாடுகிறான்)
8. ஸ்ரீ ஜெயதேவ பணிதம் இதம் உதயதி ஹரிசரண ஸ்ம்ருதி ஸாரம்
ஸரஸவஸந்தஸமயவரவர்ணனம் அனுகத மதன விகாரம்
விஹரதி ஹரிரிஹ ஸரஸ வஸந்தே
ந்ருத்யதி யுவதிஜனேன ஸமம் ஸகி
விரஹி ஜனஸ்ய துரந்தே
. ஸ்ரீ ஜெயதேவ பணிதம் இதம்- ஸ்ரீ ஜெயதேவரால் சொல்லப்பட்ட
ஸரஸவஸந்தஸமயவரவர்ணனம்- ரஸமான வசந்த கால
வர்ணனை
அனுகத மதன விகாரம் – ராதையின் விரகத்தைக் கூறுவதாகவும்
ஹரிசரணஸ்ம்ருதிஸாரம்- ஹரிசரணத்யானத்தின் சாரமாகவும்
உதயதி - சிறப்புடன் விளங்குகின்றது.
*#ஜெயதேவரின்_அஷ்டபதி_தொடரும்*......
No comments:
Post a Comment