Monday, 3 August 2020

கைசிக_ஏகாதசி_விரத_கதை

#கைசிக_ஏகாதசி_விரத_கதை
--
எப்படிப்பட்ட பாவத்தையும் கைசிக ஏகாதசி விரதம் தொலைக்கும் என்பது ஐதீகம். கைசிக ஏகாதசியின் பெருமையை விளக்கும் கதையை அறிந்து கொள்ளலாம்.

#கைசிக_ஏகாதசி_விரத_கதை

மக்கள் உழைப்பதும், பிழைப்பதும் ஏதோ ஒன்றைப் பெறுவதற்காகத்தான். ஆனால் பெறுவதே தருவதற்குத்தான் என்பதை உணர்த்தியவன் நம்பாடுவான் என்னும் எளிய பக்தன். பெருமாளைப் பாடுவதே தனது பாக்கியமாகக் கருதியவன் நம்பாடுவான். வீணையும் கையுமாக அவன் பாடுவதைக் கேட்க காதுமடல் சாய்த்துக் காத்திருப்பார் பெருமாள்.

இது நடந்த இடம் திருக்குருங்குடி என்ற திருத்தலம். அன்று கார்த்திகை வளர்பிறை ஏகாதசி. #பிரபோதின_ஏகாதசி என்று சொல்வார்கள். விரதமிருந்து பெருமாளைப் பாடக் கிளம்பினார் நம்பாடுவான். வழியில் ஒரு பிரம்ம ராட்சசன் எனக்கு இன்று நீ உணவாக வேண்டும் என்று பிடித்துக்கொண்டான்.

நம்பாடுவான் சொன்னான், “ என் உடல் உனக்கு உணவாகும் என்றால் அதைவிட வேறு என்ன மகிழ்ச்சி எனக்கு இருக்க முடியும். ஆனால் நான் போய்ப் பெருமாளைப் பாடிவிட்டு வந்து விடுகிறேன். அதன்பின் என்னை உணவாகக் கொள்ளலாம்”.

பிரம்ம ராட்சசன் மறுத்துக் கூறினான், “ நீ மனிதன். மனிதர்கள் பெரும்பாலும் சொன்ன சொல்லை மறந்துவிடுவார்கள். உன்னை எப்படி நம்புவது? “ என்று அப்போது நம்பாடுவான், தான் திரும்பி வராவிட்டால் அடையப்போகும் நரகங்களைச் சொல்லி, பயங்கரமான சத்தியங்களைச் செய்கிறான். பிரம்ம ராட்சசன் விட்டு விட்டான்.

நம்பாடுவான் மகிழ்ச்சியோடு பெருமாள் சந்நிதிக்குச் சென்று பாடுகிறான். அன்று மிக மிக உருக்கமாக ஒரு பண் பாடுகிறான். அது கைசிகப் பண். பாடிவிட்டு திரும்ப வரும்போது பிரம்ம ராட்சசனுக்கு அதுவரை இருந்த பசி இல்லை.எனவே நம்பாடுவானை உண்ணவில்லை. தன்னை சாபவிமோசனம் செய்ய வேண்டுகிறான். தான் பாடின கைசிகப் பண்ணின் புண்ணிய பலத்தைத் தந்து பிரம்ம ராட்சனனின் சாபத்தை நீக்குகிறான் நம்பாடுவான்.

கைசிகப் பண் பாடிய ஏகாதசி கைசிக ஏகாதசி. இந்தக் கதை வராகப் புராணத்தில் உள்ளது. திருக்குறுங்குடியில் இது இப்போதும் நாடகமாக நிகழ்த்தப் பெறுகிறது. மற்ற திவ்யதேசங்களில் பெருமாள் கோயிலில் கைசிக மகாத்மியம் படிக்கப்படுகிறது.

#நன்றி : #மாலைமலர்.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...