Tuesday, 20 November 2018

துளசி கல்யாணம் !

துளசி கல்யாணம் ! 

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியை "கைசிக ஏகாதசி' என்றும் "பிரபோதினி ஏகாதசி' என்றும் போற்றுவர். வைணவர்கள் போற்றும் ஏகாதசிகளுள் மார்கழி வைகுண்ட ஏகாதசிப் போன்று மகத்துவம் பெற்றது "கைசிக ஏகாதசி!'

ஏகாதசி விரதம் இருந்து, "கைசிகப் பண்'னால் பெருமாளைப் பாடிய நம்பாடுவான் பரந்தாமனின் அருள் பெற்ற திருநாள். இன்றைய நாளில் நெல்லை மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி தலத்தில் பாசுரங்கள் பாடி விசேஷ பூஜைகளோடு வழிபாடுகள் நடைபெறும். இன்று விரதம் கடைப்பிடிப்பவர்கள் ஆயிரம் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். இந்த கார்த்திகை மாத சுக்லபட்ச கைசிக ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசிக்கு "பிருந்தாவன துவாதசி' என்று பெயர். அன்று, மகாவிஷ்ணு  துளசியைத் திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

மகாவிஷ்ணு நான்கு மாதம் தியானத்தில் இருப்பார். தியானத்தில் இருக்கும் அவரை அன்று "உத்தீஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ' என்று கூறி எழுப்புவதாக ஐதீகம்.

துவாதசி அன்று காலையில் சுமங்கலிப் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, துளசி மாடம் சுற்றி மெழுகி, கோலமிட்டு, காவி இடுவார்கள். தினமும் பூஜை செய்யும் துளசி மாடத்தில் உள்ள துளசிச்செடிக்கு பஞ்சினால் ஆன மாலையும் வஸ்திரமும் அணிவிப்பார்கள். கருகமணி நகைகள் அணிவித்து அலங்காரம் செய்வார்கள். வெற்றிலைப்பாக்கு, மஞ்சள், பழங்கள், தேங்காய் வைப்பார்கள். சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்வார்கள்.

மகாவிஷ்ணு நெல்லி மரமாகத் தோன்றினார் என்பதால் ஒரு சிறிய நெல்லிக்கொம்பை ஒடித்து, துளசி மாடத்தில் சொருகிச் சேர்த்து இரண்டிற்கும் பூஜை செய்வார்கள். அப்போது,
"அநாதி மத்ய நிதனத்ரைலோக்ய ப்ரதிபா
இமாம் க்ருஹாண துளஸீம் விவாஹ விதிநேச்வர
பயோக்ருதைஸ்ச ஸைவாபி: கன்யவத் வந்திதாம் மயா
த்வத் ப்ரியாம் துளஸீம் துப்யம் தாஸ்யாமித்வம் க்ருஹாணபோ'
என்ற சுலோகத்தைச் சொல்லி துளசி கல்யாணம் செய்து "நாமசங்கீர்த்தனம்' செய்வார்கள்.

துளசியின் அடிப்பாகத்தில் சிவபெருமானும் மத்தியில் மகாவிஷ்ணுவும் நுனியில் பிரம்ம தேவரும் வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. மேலும் பன்னிரு ஆதித்யர்கள், ஏகாதச ருத்ரர்கள், அஷ்டவசுக்கள் மற்றும் அசுவினி தேவர்கள் ஆகியோர்களும் துளசியில் வாசம் செய்வதாக ஐதீகம்.

பெண்கள் தீர்க்க சுமங்கலியாகவும் நலமுடன் வாழ தினமும் துளசிமாடத்திற்கு முன்போ அல்லது துளசிச் செடிக்கு முன்போ, கோலமிட்டு, விளக்கேற்றி சுத்தமான நீரை வேரில் ஊற்றி சந்தனம், குங்குமம் புஷ்பத்தால் அலங்கரித்து அர்ச்சித்து, தூபதீப, நிவேத்தியம் காட்டி கற்பூர ஆரத்தி எடுத்து மும்முறை வலம் வந்து வணங்கினால் சுகமான வாழ்வு கிட்டும்.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...