இன்று அன்னையர் தினம் !
மாத்ரு பஞ்சகம் !
ஸ்தாம் தாவதியம்ப்ரஸூ தி ஸமயே துர்வார
சூலவ்யதா
நைருச்யம் தனுசோஷணம் மலமயீ சய்யாச
ஸாம்வத்ஸரீ
ஏகஸ்யாபி ந கர்ப்ப பாரபரண க்லேசஸ்ய
யஸ்யாக்ஷம:
தாதும் நிஷ்க்ருதி முன்னதோபி தனய: தஸ்யை
ஜனன்யை நம:
பொதுப் பொருள்: தனது கீர்த்தி, தான் செய்த காரியம் எதுவானாலும் இருக்கட்டும்; எனது தாயார் என்னை கர்ப்பத்தில் வைத்து ஒவ்வொரு நிமிஷமும் என்னைத் தாங்கியபோது அவள் அடைந்த உடல் துன்பத்துக்குப் பிரதி உபகரமாக நான் ஏதாவது செய்திருக்கிறேனோ? அதுமட்டுமா, பிரசவ சமயத்தில், தாங்கிக்கொள்ள இயலாததும், பிறரால் பங்கிட்டுக்கொள்ளவும் முடியாததுமான, அவள் அனுபவித்த சூலைவலி என்கிற கொடுமையான ஒரு வலிக்கு நான் என்ன கைம்மாறு செய்திருக்கின்றேன்?இது மட்டுமா? என்னைப் பிரசவித்ததும், என் உடல்நலத்தைப் பாதுகாக்க, தான் கொஞ்சமும் ருசியில்லாத உணவைச் சாப்பிட்டு ஜீவித்த அந்தத் தியாகச் செம்மலுக்கு நான் என்ன பரிகாரம் செய்திருக்கிறேன்? தூக்கமில்லாமல், சரியான உணவு இல்லாமல் தன் உடலை இளைக்க வைத்துக்கொண்டு, என்னை அரவணைத்தபடி எனது மலத்திலேயே படுத்துக்கொண்டு ஒரு வருஷம் என்னைக் காத்த தாயாருக்கு நான் என்ன செய்திருக்கிறேன்? தன்னைக் கஷ்டப்படுத்திக் கொண்டு அளவற்றப் பொறுமையுடன் காப்பாற்றிய தாயாருக்கு அவளுடைய குழந்தைகள் பிரதியுபகாரம் செய்ததுண்டா? யாராலும் அந்தத் தியாகத்துக்கு சமமாகப் பிரதியுபகாரம் செய்ய முடியாது. எனவே அம்மையே, இப்போதைக்கு என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம் உமக்கு நமஸ்காரம் செய்வதுதான்; ஏற்றுக்கொள்ளுங்கள் தாயே.
குருகுல முபஸ்ருத்ய ஸ்வப்ன காலேது த்ருஷ்ட்வா
யதி ஸமுசித வேஷம் ப்ராவ்ருதோமாம் த்வ
முச்சை:
குருகுல மத ஸர்வம் ப்ராரு தத்தே ஸமக்ஷம்
ஸபதி சரண யோஸ்தே மாதரஸ்து ப்ரணாம:
நான் குருகுலக் கல்வியை மேற்கொண்டிருந்தபோது ஒருநாள், அம்மையே நீங்கள் தன்னை மறந்து தூங்கிவிட்டீர்கள். அந்தத் தூக்கத்தில் நான் சன்யாசியானதுபோல் ஒரு கனவைக் கண்டு, திடுக்கிட்டு எழுந்து பதறியடித்துக்கொண்டு, அழுதவண்ணமாய் குருகுலம் வந்து கதறினீர்கள். அதைப் பார்த்து குருகுலவாசிகளும் கதறினார்கள், என்மீதான உங்கள் பாசத்தைக் கண்டு அவர்கள் நெக்குருகினார்களே, என் தாயே, உமக்கு நமஸ்காரம்.
ந கஸ்தம் மாகஸ்தே மரண மையே
தோயமபி வா
ஸ்வதாவா நோ தத்தா மரண திவஸே ச்ராத்த
விதினா
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரக மனு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதர
துலாம்
அம்மையே, நீங்கள் முக்தியடையும் சமயத்தில், உங்களுக்குக் கொஞ்சம் ஜலமாவது வாயில் விட்டேனா? பிறகும் ஸ்வதா மந்திரத்தினால் ச்ராத்தம், தர்ப்பணமாவது செய்தேனா? உங்களது முக்தி சமயத்தில் தாரக மந்திரமாவது உங்கள் காதில் ஓதினேனா? அச்சமயம் எனக்குக் கிடைக்காததாலும், எதுவும் செய்ய அதிகாரமில்லாததாலும், சன்யாசியானதாலும் எந்த வைதீகமும் அனுஷ்டிக்க முடியாது போனதாலும், மனம் தவிக்கின்ற உங்களது மகனான என்னிடம் தயவுசெய்ய வேண்டுமம்மா! உங்களது கமல பாதங்களைச் சரணடைந்து
வேண்டுகின்றேன் தாயே.
முக்தாமணிஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸ¤ தத்வாம்
இக்யுக்தவத்யாஸ்தவ வாசி மாதர்
ததாம்யஹம் தண்டுல மேவசுஷ்கம்
அம்மையே, என்னைக் காணும்போதெல்லாம், ‘என் முத்தே, என் கண்ணே, என் அப்பனே, ராஜா! நீ சிரஞ்சீவியாக இருக்க வேண்டும்’ என்று எப்பொழுதும் சொல்லி என்னிடத்தில் கருணையையும், அன்பையும், தயையும் கலந்த அம்ருத மயமான சொற்களால் என்னைச் சீராட்டி, பாலூட்டி, தாலாட்டி என்னை வளர்த்த எனது அன்னைக்கா வாயிலே, வேகாத அரிசியைச் சமர்ப்பிப்பேன்! இதைப் பொறுக்க முடியவில்லையே அம்மையே! உன்னைச் சரணடைகிறேன்.
அம்பேதி தாதேதி சிவேதி தஸ்மின்
ப்ரஸதி காலே யதவோச உச்சை
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தேத்
யஹோ ஜனன்யை ரசிதோய மஞ்ஜலி:
தாயே, என்னைப் பெற்றெடுக்கும்போது பொறுக்க முடியாத வேதனை சமயத்தில் ‘அம்மா! அப்பா! சிவபெருமானே, கிருஷ்ணா, கோவிந்த, ஹரே முகுந்தா’ என்று வலி தாங்கிக்கொள்ளும் உபாயமாக தெய்வங்களை அழைத்த என் கருணைத் தெய்வமே! என் இரு கைகளையும் உயர்த்தி உங்களுக்கு அஞ்சலி செய்து, உங்களைச் சரணடைகின்றேன்.
பெற்ற தாய்க்கு, அவளுடைய இறுதிப் பொழுதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் முற்றும் துறந்த சந்நியாசியான, பரமேஸ்வர அவதாரமான ஆதிசங்கரர். முற்றும் துறந்த ஒரு துறவியையே தாயன்பானது கதறச் செய்தது என்றால் அதற்கு உன்னதமானதொரு காரணமும் உண்டு, பகவத்பாதாள், சாதாரணமான உலகத்தில் நாம் இன்று காணும் சந்நியாசிகளைப் போன்றவர் அல்லர்.
தன் காலத்துக்குப் பின் வரக்கூடிய சந்நியாசிகளுக்கெல்லாம் வழிகாட்டத் தோன்றியவர். ‘தாயிற் சிறந்த கோயிலில்லை’ என்னும் சாஸ்திர வாக்கியத்தை உறுதிபடுத்தத் தோன்றியவர் அவர். ஒருவன் பரம்பொருளில் லயித்த மனதினனாக சிறிது காலம் இருந்தான் என்றாலும்கூட, அப்படிப்பட்ட சாதகன் எல்லாப் புண்ய க்ஷேத்ரங்களிலும், நதிகளிலும், குளங்களிலும் ஆங்காங்கு நீராடிய பலனையும், பூவுலகம் அனைத்தையும் தானமாகத் தந்த பலனையும், ஆயிரம் யாகங்களைச் செய்த பலனையும், எல்லாத் தெய்வங்களையும் வழிபட்ட பலனையும், தன் முன்னோரை பிறவிச் சுழலினின்றும் மீட்ட பலனையும் அடைந்தவராக மூவுலகினாலும் வழிபடத்தகுந்தவராக ஆகிறான் என ‘லகுயோக வாஸிஷ்டம்’ கூறுகிறது.
இந்த அடிப்படையில் மஹாப்ரம்ம ஞானியான ஆதிசங்கரரைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ! அவரைப் பெற்றெடுத்த தாய்-தந்தையின் மகத்துவத்தை விவரிக்கதான் இயலுமோ? அதிலும் முன்னறி தெய்வமான அவரது தாயாரின் பெருமை அளப்பரியது. அவரைப் போன்றதொரு மாமுனி தோன்றிய குலத்தின் அறுபது தலைமுறை முன்னோரும், அறுபது தலைமுறை பின்னோரும் உய்வை அடைகிறார்கள். மனுதர்ம சாஸ்திர காலத்திலிருந்து எல்லா சாஸ்திரங்களிலும் தாயாரின் உயர்வைக் கூறுகின்ற வாக்யங்களை காண்கிறோம். மனு, ‘‘ஒரு மகன் நூறு வருடங்கள் பாடுபட்டாலும் தன் பெற்றோருக்குத் தான் பட்ட பிறவிக் கடனைத் தீர்க்க முடியாது’’ எனக் கூறுகிறார் :
பெற்றெடுத்து, அதற்குப் பின் வளர்க்கும் போதும் தாய், தந்தை எடுத்துக் கொள்ளும் சிரமத்திற்கு ஒரு நூறாண்டு உழைத்தாலும் ஒருவன் பிறவிக்கடன் தீர்ப்பது அரிது. சாணக்யரும் தன் நீதி சூத்திரத்தில் தாயின் பெருமையை, ‘‘தாயே தலை சிறந்த குருவாவாள்; எந்நிலையிலும் அவள் காக்கப்பட வேண்டியவள். ஒருவனுடைய ஆத்மாவுக்கு உயிரும் உடலும் கொடுப்பவள் அவளே" என விளக்குகிறார்.