Monday, 16 March 2020

ஶ்ரீசக்கரம்

அம்பிகையை #ஶ்ரீசக்கரம்
என்ற யந்திரத்தின் நடுவில் #பிந்துவில் எழுந்தருளச் செய்து, அவள் பரிவார தேவதைகளை அன்னையை நோக்கி அவளைச் சுற்றி ஒவ்வொரு கோணங்களில் எழுந்தருளியி
ருப்பதாகப் பாவித்து வழிபடுவதே ஶ்ரீ சக்கர பூஜையாகும்.

பூஜா மந்திரத்தாலும் ஆசமனத்தாலும் தூய்மை செய்த ஒருவர் குருவழிபாடு புரிந்து சங்கல்ப்பித்துக் கொண்டு, தேகரட்சை செய்து கொள்ள வேண்டும். தேவி எழுந்தருளும் ஶ்ரீ சக்கரத்தினைச் சுற்றிலும் மதில்களாகவும், கோட்டைகளாகவும், நாற்பத்து நான்கு வரிசைகளை பாவனையுடன் பூசிக்க வேண்டும். இதுவே ஶ்ரீ சக்கர பூஜையின் முதலம்சமாகச் சொல்லப்பெறுகிறது.

அடுத்துப்  பூஜை  செய்பவர்  தமது  பௌதீக  உடலை  மந்திரங்களின்  மூலம்  தெய்வீகமாக்கிக் கொள்ள வேண்டும். விக்நோத்ஸாரணம் என்கிற விக்னங்களை நீக்கிடும்  வழிபாட்டையாற்ற  வேண்டும்.  இதன்  பின்,  தெய்வீகச்  சரீரமெங்கும்  தேவர்களை  ஆவாஹித்துத்   தெய்வமயமாகச் ,சக்தி மயமாகத்  தன்னையும் தன்னைச் சுற்றியிருக்கிற இடத்தையும் சாதகன் அமைத்துக் கொள்கிறான்.

உடம்பில் #மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்ஞா என்கிற ஆறு சக்கரங்களையும் எழுப்பி  தேவதைகளை நியாசம் செய்தல் வேண்டும். இவ்வாறு பதினெட்டு வகையான நியாசங்கள் உள்ளன. இப்படியெல்லாம் தன்னை சுத்தி செய்து தெய்வீகப்படுத்திக் கொண்ட பின்னரே, ஒருவர் ஶ்ரீசக்கர பூஜையினுள் நுழைகிறார்.

ஸ்ரீ சக்கரம் யந்திரங்களின் ராஜா எனப்படுகிறது. பிரபஞ்சம், குரு, தனிமனிதனின் உடல் ஆகியவற்றின் குறியீடாக விளங்கும் ஸ்ரீ சக்கரத்தின் வழிபாடு பிறவித்தளையை அறுக்கும் ஸ்ரீ வித்யை எனப்படுகிறது. ஸ்ரீ சக்கரம் சிவ சக்தி ஐக்கியம் என்றும் கூறப்படுகிறது. ஸ்ரீ வித்யையும் வேதாந்தம் கூறும் பிரம்மவித்தையும் ஒன்றே என்றும் கருதப்படுகிறது. முப்பரிமாணத்தில் ஸ்ரீ சக்கர ராஜம் நவாவரண பூஜையால் வழிபடப்படுகிறது. தாந்ரீக முறையான ஸ்ரீ வித்யாவை வேதாந்தமான அத்வைதத்துடன் இணைத்த மாபெரும் சாதனையாளர் ஸ்ரீ சங்கராச்சாரியார் ஆவார்.

ஶ்ரீசக்கர மத்தியில் ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், ஆகியோரைக் கால்களாகவும், சதாசிவனைப் பலகையாகவும் கொண்ட பஞ்ச பரும்மாசனத்தில் “#ஸர்வானந்தமயபீடம்” என்கிற பிந்து வடிவமான மஹா பீடத்தில் காமேஸ்வரனின் இடது மடியில் அன்பு வடிவமான பாசத்தையும், கோபமாகிய அங்குசத்தையும், மனமாகிய கரும்பு வில்லையும், ஐந்து தன்மாத்திரைகளைக் குறிக்கும் பஞ்சபாணங்களையும் ஏந்தியவளாக ஶ்ரீமத் லலிதா மஹாத்ரிபுர சுந்தரி எழுந்தருளியிருப்பாள் என்று சாக்த தந்திரங்கள் குறிப்பிடுகின்றன.

சாக்தர்களுக்கு மட்டுமல்ல, சைவர்களுக்கும் அன்னை வழிபாடு முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. “சிவஞானப்பிரதாயினி” என்பது அம்பாளின் திருநாமங்களுள் ஒன்று. சிவஞானப்பேற்றைத் தந்து முக்தி அருளும் சிறப்புடையவள் அவளேயாம்.

ஆக, அன்னையை இவ்வாறு மனதில் கற்பித்து, மனச்சுத்தி பேணி, வைதீக மரபின் வண்ணம் அக்னியிலும், ஆகம மரபின் வண்ணம் விக்கிரகத்திலும், தாந்திரீக மரபின் வண்ணம் ஶ்ரீசக்கரத்திலும் ஆவாஹித்து வழிபடுவர். இவ்வாறு சாக்த தந்திர மரபின் வண்ணம் வழிபடுவது என்பதும் தமிழகத்தின் மிகப் பழமையான வழிபாட்டு மரபுகளுள் ஒன்று.. திருமந்திரம் தந்த திருமூலர் பெருமானே இவ்வழிபாட்டு மரபு பற்றி விளக்கிச் சொல்லியிருக்கின்றமையை காண்கிறோம்.

“ககராதி ஓரைந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தாள் சுத்தவெண்மை
ககராதி மூவித்தை காமிய முக்தியே
 – (திருமந்திரம்- புவனாபதி சக்கரம்)”

அறுபத்து நான்கு உபசாரங்களை அளித்து அன்னையை வழிபடுவர். இவற்றை எல்லாம் ஶ்ரீ சக்கர சிம்மாசனத்தில் எழுந்தருளியிருக்கிறவளாக, அன்னையைப் பாவித்து அளித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.

No comments:

Post a Comment

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...