Friday, 18 December 2020

ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 4:

 ஶ்ரீகாமாக்ஷி அருட்பாவை 4:



"உகமெல்லாம் ஓடியபின் ஒன்றாக நின்றிச்

சகமெல்லாம் ஈன்றருளும் சீர்மிகுந்த தாயை

நகமெல்லாம் நாரணணின் பத்துதிப்பின் வித்தாய்

முகமெல்லாம் தண்ணருள் சேர் புன்முறுவல் காண

இகமெல்லாம் என்றுணையாய் என்குடியைக் காத்துச்

சுகமெல்லாம் ஈயுஞ் சுமங்கலியைக் கண்டு

பகலெல்லாம் பாடி பரவசத்தில் ஆடி

அகமெல்லாம் போய்க் குளிர்வதென்றேலோர் எம்பாவாய்!!"


"ஸர்வயுகங்களும் முடிந்த பின்னர் கல்பாந்தரத்திலே ப்ரஹ்ம விஷ்ணு ருத்ராதிகளும் உன்னிடம் ஒடுங்கிய பின்னர், ஏகவஸ்துவாய், தன்னைத் தவிர்த்து வேறொன்றுமில்லாத பரவெளியாய் விளங்கும் அம்மே!! பின்னர் உனது யந்திர வடிவான ஶ்ரீசக்ரத்தையும், அதன் ப்ரதிபலிப்பான ப்ரஹ்மாண்டகோடிகளையும் ஒரு கணத்திலே ஈன்றெடுத்தவளான தாயே!!


ஒவ்வொரு கைவிரல் நகக்கணுவிலிருந்தும் மஹாவிஷ்ணுவாம் ஶ்ரீமந்நாராயண மூர்த்தியின் தசவிதமான அவதார பேதங்களை கோடிக்கணக்கில் உண்டாக்கியவளே!!


(ஒவ்வொரு கல்பத்திலும் ஒவ்வொரு முறை தசாவதாரங்களின் உற்பத்தியின் பொருட்டே கோடிக்கணக்கான தசவித அவதாரங்கள் என ஸூசிக்கப்பட்டது. 


ப்ரஹ்மாண்டபுராண உத்தர பாகம் ஶ்ரீலலிதோபாக்யானம்


ஶ்ரீமத் த்ரிபுரா ரஹஸ்ய மாஹாத்ம்ய காண்டம்


மற்றும் பல தந்த்ரங்களில் இந்த சரித்ரம் உண்டு!!


கராங்குலி நகோத்பன்ன நாராயண தசாக்ருதி : (ல.ஸ)


கராங்குலிநகோதய விஷ்ணு தசாவதாரே (கமலாம்பா நவாவரணம்))


அருள்பொழியும் முகமெல்லாம் ப்ரகாசமாகி விளங்கும் மந்தஸ்மித்தினை உடையவளே!! ஸர்வாநந்தமய மஹாபீடத்தை உடையவளாதலால் பரமப்ரகாசமான ஆனந்தத்தின் ஸ்வரூபத்துடன் கூடினவளே!!


அத்தகைய ஸ்வரூபத்தைக் காணும் வண்ணம் உன் ஆலயஞ் சேர்ந்து விளங்கும் போது, எனக்கு துணையாய் விளங்கி, என் குலத்திற்கு தெய்வமாய் குலத்தைக் காத்து, இவ்வுலகில் ஸகல ஸௌபாக்யங்களையும் ஈந்தருளும் சுமங்கலையான காமாக்ஷியே!!


உன்னைக் கண்டு பகற்பொழுதெல்லாம் பாடி, பரவசத்தினால் உள்ளம் உருக ஆடிக்கொண்டு

(பலவிதமாய் உன்னை பாடவும் ஆடவும் -- ஶ்ரீசக்ர ராஜ( அகத்தியர் கீர்த்தனை))


அத்தகைய அருட்ப்ரவாஹத்தால் அகம் குளிர்ந்து போக, மனமானது அழிந்து லயத்தை அடைய, உன் ஸ்வரூபமானது உணரப்பெற்றதாலே அகம் குளிர்ந்து மனம் அழிந்து போகும் நிலையை எப்போது அருள்வாய் தாயே!!"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 3:

 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 3:



"செம்மான் மகளைத் திருடித் திருமணங்கொள்,

பெம்மான் முருகனைப் பேணி பணிந்திடும் நாள்,

அம்மாவெமை வந்து ஆட்கொண்டாளாட்கொண்டாள்,

இம்மாவருள் அதனை ஏத்தாதிருந்திடவோ!?

சும்மாவினி நாவும் சொல்லாதிருந்திடுமோ!?

தம்மாலுலகெலாம் தாங்கி உணவூட்டும்,

செம்மால் புகழ்ந்தேத்தும் சீர்கொண்ட கற்பகத்தை,

உம்மாலியன்றவரை ஓதேலோர் எம்பாவாய்!!"


விளக்கம் :


"மான் வயிற்றிலுதித்த வள்ளிப்பிராட்டியைக் கவர்ந்து சென்று திருமணம் செய்துகொண்ட பெருமானாம் முருகனையே வழிபட்டு வரும் நாளில், அதத்கைய முருகப்பிரானுக்கும் மற்ற உலகினர் அனைவருக்கும் தாயாக விளங்கி வரும் பராசக்தியாகிய ஶ்ரீகாமாக்ஷி தானாகவே வந்து ஆட்கொண்ட மஹிமையை எங்ஙனம் சொல்வேன்!! எப்படிச்சொல்வேன்!!


(ஶ்ரீஸுப்ரமண்ய உபாஸனை ஶ்ரீவித்யையிலேயே கொண்டு விட்டுவிடும் என்பதை எளிமையாய்க் கூறுகிறார் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்!! ஆதியில் முருகனை வழிபட்டுப் பின் அம்பிகையிடம் சரணாகதி செய்த அடியார் அனேகருண்டு!!


ஶ்ரீவித்யை தமிழகத்தில் பரவக் காரணமாவிருந்த ஶ்ரீஶ்ரீசிதாநந்தநாதர் எனும் ஶ்ரீநெடிமிண்டி ஸுப்ரமண்ய ஐயர் ஶ்ரீமுருகனை உபாஸித்தவரே. பின் ஶ்ரீகுஹாநந்தநாதாளை அடைந்து அவரருளால் ஶ்ரீவித்யையை அடைந்து, பன்னிரு வருஷங்கள் ஶ்ரீவேலாயுதத்தையே ஶ்ரீசக்ரமாய் பூஜித்து வந்தவர்!!


ஶ்ரீஅருணகிரிநாதரும் ஶ்ரீபராசக்தியின் பலவடிவங்களையும் மந்த்ர பீஜாக்ஷரங்களையும் திருப்புகழின் அனேக இடங்களில் கூறியுள்ளதைக் காண்க!!


ஶ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் ஶ்ரீசிதம்பரநாதமஹாயோகீச்வரரிடம் காசியில் ஶ்ரீவித்யா மஹாஷோடஷாக்ஷரி எனும் மஹாமந்த்ரோபதேசத்தை அடைந்து, பின் திருத்தணி வர, ஶ்ரீஷண்முகர் வயதான கிழவராய் தோன்றி கல்கண்டை அவர் வாயில் போட, ஶ்ரீவித்யா பரமான ஶ்ரீகுருகுஹ விபக்திக் கீர்த்தனையைத் தொடங்குகிறார். ஶ்ரீஸுப்ரமண்யரைத் தன் குருநாதராகவும், ஶ்ரீவித்யையில் உயர்ந்த காதிமதத்தைத் சேர்ந்தவராகவுமே தன்னை முதல் கீர்த்தனையான "ஶ்ரீநாதாதி குருகுஹோ ஜயதி" என்பதில் கூறுகிறார்.


ஶ்ரீரமணமஹருஷியை ஸுப்ரமண்யாவதாரமாகவே கூறுவதுண்டு. ரஹஸ்யமாக ஶ்ரீசக்ரபூஜையையே அவர் செய்து வந்தார் என்றும் கூறுவர்.


அனேக மஹான்கள் இது போல் ஸுப்ரமண்ய உபாஸனை செய்து பின்னர் அவரருளால் ஶ்ரீவித்யோபாஸனை அனுக்ரஹிப்பெற்று பரதேவதையின் திருவடியை அடைந்துள்ளனர்!!)


இப்படி வலியவந்து ஆட்கொண்டு அருளும் பரதேவதையின் அருளைப் போற்றிப் பாடாது இருக்கவும் இயலுமோ!!?


எனது நாவும் காமாக்ஷியம்மையின் மஹிமையைப் பேசாது இருந்திடுமோ!!?


இவ்வுலகையெல்லாம் தமது கருப்பத்திலே தாங்கி, அவ்வுயிர்க்கூட்டத்திற்கு உணவளித்தருளும் கல்பகக்கொடியான ஶ்ரீகாமாக்ஷியம்மையை, திருமாலான மஹாவிஷ்ணுவால் வழிபடப்பெற்ற எமது அம்மையை,


நம்மாலியன்றவரை அவள் புகழைப் பாடிப் பணிய வேண்டாமோ!!?"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 2:

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 2:



"சும்மாவிருவென்று சொன்னார் ஒரு சாரார்

அம்மாவெனக்கூவி ஆறுதல் நாம் காணாது

எம்மாலிருக்கவிங்காகுமோ வாய்திறந்து

அம்மாவென அழைத்தோம் ஆயேவென அழைத்தோம்

சிம்மாஸனத்துறையும் தேவியெனவழைத்தோம்

பெம்மான் சிவனிடத்துப் பெண்மணி என்றழைத்தோம்

நம்மாலியன்றவரை நாவாரப் பாட்டிசைத்தோம்

சும்மாவிருக்குமோ சொல்லேலோர் எம்பாவாய்!!"


விளக்கம்:


""சும்மா இரு!!" என்று அருணகிரியாருக்கு ஶ்ரீமுருகப்பெருமான் உபதேசித்ததாகக் கூறுவர். அத்தகைய ஸமாதி நிலையோ ஸாமான்ய மக்களான நம்போன்றோருக்கு ஸித்திப்பது கடினம். சும்மா இருப்பது என்றால் உடல் மட்டுமல்ல, மனமும் அடங்கிய நிலையே அது!! அத்தகைய நிலையை அடைவது கடினமல்லவா!! அத்தகைய நிலையை உபதேசிப்பவர்கள் ஒரு சாரார்!! அவர்கள் அனைத்தும் உணர்ந்தவர்கள்!!


ஆனால் நம்போன்றோரால் அங்ஙனம் இருக்க இயலாது அல்லவா!! நம்மால் பிராட்டியாகிய ஶ்ரீகாமாக்ஷியம்மையை அம்மா எனவழைத்து ஆறுதலடையாமல் எப்படி இருக்க இயலும்!! ஆதிசக்தியான அம்பிகை கருணையுருக்கொண்டு கைகளில் கரும்பும், பூவாளியும், மாவெட்டியும், பாசக்கயிறும் தாங்கி ராஜராஜேச்வரியாக, திரிபுரசுந்தரியாக, காமாக்ஷியம்மையாக காஞ்சிபுரத்தில் எழுந்தருளியுள்ளாள்.


அவளை "அம்மா!! தாயே!! பராசக்தி!!" எனவழைத்து மகிழ்வதைக் காட்டிலும் நிம்மதியும்,ஆனந்தமும், ஆறுதலும் உண்டோ!! ஆதலின் அவ்வம்பிகையாகிய ஶ்ரீகாமாக்ஷித் தாயாரை வாய்நிறைய "அம்மா!!" என்றழைத்தோம்!! "ஆயே!!" என்றழைத்தோம்!!


"ஶ்ரீசக்ரத்தின் மத்யத்திலே பிந்துபீடத்திலே பஞ்சப்ரேதமயமான மஹாஸிம்மாசனத்திலே உறையும் தேவி!!" என அழைத்து மகிழ்ந்தோம்!!


"எம்பெருமான் சிவனிடத்து அமர்ந்து விளங்கும் பெண்ணில் நல்லாள்!!" என்றழைத்தோம்!!


அம்பாளின் பெருமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவிற்கவ்வளவு வாயாரப் பாட்டிசைத்தோம்!! தேனினும் இனிமை வாய்ந்த காமாக்ஷியாம் ஶ்ரீலலிதையின் நாமத்தை வாயாரச் சொல்லி மகிழ்ந்தோம்!!


ஓ!! பெண்ணே!! இனியும் சும்மாவிருக்கலாமா!! நீ!! காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுவாயாக!!"


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை


 ஶ்ரீ காமாக்ஷி அருட்பாவை 1:




கணபதிக் காப்பு :


அத்திமுகத்தோனை அன்றிருந்து பேணாது

சத்தி தனதென்று தானினைந்த சங்கரனை

சத்தியியல்பறிய தேரச்சு தூள் செய்த

சித்தி விநாயகனை சித்தத்தில் வைத்தீரேல்

சத்தி அருள்பெறலாம் சாதிக்கலாம் ஏதும்

முத்தி நிலைபெறலாம் மும்மலமும் நீங்கியொரு

சுத்தவுளம் பெறலாம் தூய்மையாம் வாழ்வுறலாம்

நித்த நிலைபெறலாம் நின்றேலோர் எம்பாவாய்


அருட்பாவை 1:


தாயைத் தனிமுதற் சாட்சியாம் சங்கரியை

மாயப்பிணி அகற்றும் மந்திர மாமணியைத்

தூயப்பெருவாழ்வு தந்தருளும் சுந்தரியைச்

சேயைத் துணைகொளும் சீர்மிகுந்த கற்பகத்தை

பேயைப் பழிக்கும் துயிலகற்றிப் பேதையரே

நேயத்துடன் கூடி நின்மலச் சிந்தையொடு

வாயைத் திறந்து நீர் வாழ்த்தினால் வாழ்ந்திடுவீர்

காயத்துடன் வீடு கண்டேலோர் எம்பாவாய்


விளக்கம் :


மார்கழி முதல் நாளுக்கான அருட்பாவை விளக்கம். காமாக்ஷியம்மையின் அருள்பெற்ற மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷிதாஸர் இயற்றியது.


"உலகெலாம் ஈன்றெடுத்த அன்னையாம் அம்பிகையை, தனிப்பெரும் ப்ரஹ்மமாய் விளங்கும் பராசக்தியை, உலகிற்கெல்லாம் ஒரே சாட்சியாய் விளங்கும் உமா தேவியை, சங்கரனின் இல்லாளை, மாயையெனும் கொடும் பிணி அகற்றும் மஹாமந்திரமாம் பஞ்சதசாக்ஷரி எனும் ஶ்ரீவித்யை வடிவானவளை, பிரமவிஷ்ணுக்களும் அடைவதற்கு அரிதான திருவடிமுத்தியாம் தூயப்பெருவாழ்வு தந்தருளும் திரிபுரசுந்தரியை, வணங்கும் சேய்களுக்கு அஞ்சேலென ஓடிவந்து அருள் கற்பகவல்லியான அம்பிகையை,


பேயைப் பழிக்கக்கூடியளவிற்கு விடியற்காலையில் தூங்கும் பேதைகாள்!!, வாருங்கள் நியமத்துடன் கூட மலங்களில்லாச் சிந்தையுடன், வாய்விட்டு காமாக்ஷியம்மையின் புகழைப் பாடுங்கள்!! ஏகாம்பரநாதரின் இல்லாளின் மகிமையைப் பாடுங்கள்!! காமேச்வரனின் சக்தியைப் பாடுங்கள்!! அவ்வாறு வாழ்த்தினீரேல் இவ்வுடல் நிலைபெற்று விளங்கும்போது முத்திநெறியை உணரும் ஜீவன்முக்தி நிலையை அடைவீர்!!"


-- மயிலாப்பூர் ஶ்ரீகாமாக்ஷி தாஸர்


ஶ்ரீகாமாக்ஷி சரணம் மம


ஶ்ரீமாத்ரே நம:

லலிதாம்பிகாயை நம:


-- மயிலாடுதுறை ராகவன்

அஷ்டமி சப்ரம் !

 மார்கழி அஷ்டமி விரதம் !


19.12.19 ! மார்கழி 3 !


அஷ்டமி சப்ரம் !



ஈசன் உலகிற்கு படியளக்கும் நாள் !


உலகில் உள்ள அனைத்து ஜீவ ராசி களுக்கும் சிவபெருமான் உணவு படியளக்கும் திரு விழாவே, அஷ்டமி பிரதட்சண சுவாமி புறப்பாடு ஆகும். இந்த விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரிஷப வாகன சட்டத்தேர் உலாவாக கொண்டாடப்படுகிறது. இந்த படியளக்கும் திருநாளைப் பற்றிய ஒரு சுவாரசியமான கதை உண்டு. 


ஒரு சமயம், பார்வதி தேவிக்கு மனதில் ஒரு சந்தேகம் வந்து விட்டது. அதாவது ‘அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா?’ என்று மனதுக்குள் கேள்வியை எழுப்பியவாறு இருந்தாள். கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.


சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்று விட்டு திரும்பி வந்தார். அவரை இடை மறித்த பார்வதி, ‘அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே.. இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா?’ என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள்.


‘ஆம்.. அதில் உனக்கென்ன சந்தேகம்..?’ என்று சிவபெருமான் பதிலளித்தார்.


‘இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக் கொண்டார்’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட பார்வதி தேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்து விட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.


எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்- மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள்.


தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.


அன்றைய தினம் அருள்மிகு மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் ரிஷப வாகனத்தில் சட்டத்தேரில் வெளி வீதிகளில் உலா வருவார்கள். அந்தத் தேரினை பெண்கள் இழுத்து வருவார்கள்.


அனைத்து உயிர்களுக்கும் இறைவன் படியளக்கும் நிகழ்வை நினைவூட்டும் வகையில் அஷ்டமி சப்பரம் புறப்பாட்டின்போது கோவில் நிலத்தில் விளைந்த நெல் மணிகள், அரிசி ஆகியவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதிகளில் நடப்பதே வழக்கம். ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர்.


விரதமிருந்து மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாக மனதில் நினைத்துக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுங்கள்.


இந்நிகழ்ச்சி, நாளை அதிகாலை 5.30 மணிக்கு  கோயிலிலிருந்து சுவாமி,அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து, அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வருவர்  அம்மன் சப்பரத்தை பெண்கள்  இழுப்பது தனிச்சிறப்பாகும். நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்த சப்பரத்தை  ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்வர் . மேலும், கீழே சிதறிக்கிடந்த அரிசியைக் கூடியிருந்த பக்தர்கள் எடுத்துக் கொண்டு வீடுகளுக்குச் செல்வர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசியை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால், அள்ள அள்ள அண்ணம் கிடைத்து, பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையைக் கடைப்பிடிப்பதற்காக என்ற நம்பிக்கை மெய்ப்பிக்கப்படும் என்று பக்தர்கள் நம்புகின்றனர் .


 திருச்சிற்றம்பலம்.

Monday, 14 December 2020

மார்கழி ஸ்பெஷல் !

 மார்கழி ஸ்பெஷல் !



ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்டிருந்த பரந்தாமனிடம் பூமாதேவி,

``வராக அவதாரத்தின் போது, இரண்யாட்சன் என்னைக் கடலுக்குள் ஆழ்த்திய போது, அழைத்ததும் வந்து காப்பாற்றினாயே கண்ணா... என்னைப் போலவே, பல கோடி பக்தர்கள் இன்று பூமியில் அவஸ்தைப்படுகிறார்களே.. அவர்கள் அழைத்தாலும் நீ வருவாயா..?" தன் மீது உய்யும் தன் மைந்தர்களான மானுடர்கள் மேலான பரிவோடு கேட்டாள்.


பரந்தாமன் சிரித்தபடி, ``நிச்சயமாக. ஆனால், என்னை அழைக்க மனிதர்கள் பக்குவப்பட்டிருக்க வேண்டுமல்லவா? அதற்கு நீ ஒருமுறை பூமியில் அவதரித்து, கீதையின் பொருளை மீண்டும் ஒருமுறை சொல்வாயாக!" என்று பூதேவியிடம் பணித்தாராம்.


திருமாலின் ஆணைப்படியே பூமாதேவி, பரந்தாமன் `வடபத்ர சாயி' என்ற பெயர் தாங்கி அவதரித்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித்திங்கள் வளர்பிறையில் பூர நட்சத்திர தினத்தில் பூமாதேவி, 


`துளஸிகான நோத்பவாம் பாண்டியே விஸ்வம்பராம் கோதாம் வந்தே..' 

என்று பகவானுக்காக விஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார் பராமரித்த மலர்வனத்தில் துளசி செடிகளுக்கு இடையில் அவதரித்தாளாம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவதரித்த குழந்தையை, அனந்தனின் அருள் கொடையாகவே பார்த்த பெரியாழ்வார். மனைவி விரஜையுடன் வடபத்ரசாயியின் திருவடியில் மகளை வைத்து, அவளுக்குக் கோதை என்ற பெயரைச் சூட்டி, அவளுக்கு ஞானத்தைப் போதிக்கவும் ஆரம்பித்தார்.


சிறுவயது முதலே கண்ணனின் பெருமைகளைத் தந்தை சொல்லக் கேட்டு வளர்ந்த கோதை, ஒரு கட்டத்தில் அந்த அனந்தனைத் தன் மணாளனாகவே மனதில் வரிந்துகொண்டாள். மற்ற அனைவரும், இறைவனுக்குச் சாற்றிட பூமாலைகளைக் கோத்துக்கொண்டிருக்கும் பொழுதில், கோதை மட்டும் அந்தத் திருமாலைக்கு பூமாலையுடன் பாமாலையையும் சேர்த்து இரு மாலைகளைத் தொடுத்துக் கொடுத்தாள்.  


`நானிலம் அளந்தவனுக்கு நாயகியாக வருவதற்கு நான் முழுவதும் ஏற்றவள்' என்ற பெருமையுடன் தான் கட்டிய மாலைகளைத் தானே முதலில் சூடிப் பிறகு அந்த மாலையை அவள் பகவானுக்குச் சாற்றக் கொடுத்தனுப்பினாள். இதைப்  பார்த்து வருத்தம் கொண்ட பெரியாழ்வார், மறுநாள் கோதை சூடாத மாலையை எடுத்துச்சென்றார்.

ஆனால் மாலவனோ அதை ஏற்க மறுத்து 

``கோதை சூடிய மாலைதான் எமக்கு ஏற்றது. அதைக் கொண்டு வாருங்கள்" என்ற ஆணையிட்டான். அன்றுமுதல் அவள் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடி'யும் ஆனாள். 


அந்த நந்தகோபன் குமரனை, பாற்கடலில் உறங்கும் பரமனை, ஓங்கி உலகளந்த உத்தமனை, ஆழிமழைக் கண்ணனை, தாமோதரனை, நாராயணனை, மாதவனை, மணிவண்ணனை, கேசவனை, குறைவொன்றும் இல்லாத கோவிந்தனை, மனதுக் கினிய கண்ணனைப் பாடிக் கொண்டிருந்த போதெல்லாம் அகமகிழ்ந்த பெரியாழ்வார், மகளை மணமுடித்துக் கொடுக்கவும் விளைகிறார்..

ஆனால், திருமணப் பேச்சை எடுத்தவுடனேயே ஆண்டாள் `மானிடவனை மணாளன் ஆக்கி வாழமாட்டேன். நான் நாரணன் நாயகியாகவே வாழ இருக்கிறேன்..!' என்று அரங்கன் மீதான தனது காதலைக் கோதை சொல்லக் கேட்டு மிகவும் மனம் வேதனையடைந்தார் தந்தை பெரியாழ்வார்.


ரங்கன் ஆண்டாளின் கனவில் வந்து கைப்பற்றி வாரணம் ஆயிரம் சூழவலம் வந்தான். அந்த நினைப்பே அவளைப் பேருவகை கொள்ளவைத்தது. அந்த உவகையே நாச்சியார் திருமொழியாக மலர்ந்தது. அவளுக்கென்ன அரங்கன் கனவில் மிதக்கலாம். ஆனால் தந்தையின் துயரம் அத்தனை எளிதானதா? நாள்கள் செல்லச் செல்ல, கோதையை எண்ணிக் கவலைகொண்ட பெரியாழ்வார், ஒருமுறை இறைவனிடம் தன் மனக்குறையை முறையிட்டார். 


அன்றிரவு பெரியாழ்வார் கனவில், சங்கு, சக்கரத்துடன் தோன்றிய பரந்தாமன்,

``நாளை கோதையை, திருவரங்கத்துக்கு அழைத்து வாருங்கள். அவளை நான் மணமுடிக்க விரும்புகிறேன்" என்று திருவாக்கு அருளினான். இதே போன்று திருவரங்கத்து கோயில் அர்ச்சகர் கனவிலும், மன்னன் வல்லப தேவன் கனவிலும் தோன்றி, தான் ஆண்டாளை மணக்கவிருக்கும் செய்தியை தனித் தனியே சொல்லி மணவிழாவுக்குத் தயார் செய்யச் சொன்னான்.


இதெல்லாம் தெரியாமல், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து திருவரங்கம் செல்லத் தயாரான பெரியாழ்வாரையும் கோதையையும் மன்னரே எதிர்கொண்டு வந்து யானையில் ஏற்றித் திருவரங்கம் அழைத்துச் சென்றான். 


கோயிலில் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. மறையோர்களின் வேத கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. அத்தனை நாள்களும் அரங்கனையே நினைத்து வாழ்ந்த ஆண்டாளின் மனம் எத்துணை விரைவாய் அவனை அடையலாம் என்று ஏங்கிக்கொண்டிருந்தது. 


அரங்கனின் முன் அழைத்து வரப்பட்டாள் கோதை. வேதியர்கள், சங்குகள் முழங்கினர். அவள் மனதுள் கோபாலனின் உதடுகளை வருடிய பாஞ்சசன்யத்தை நினைத்துக்கொண்டாள். முரசுகளும் பறைகளும் வாழ்த்தொலிகளும் முழங்கின.


 ``மாலை சாற்றினாள்! கோதை மாலை மாற்றினாள்..! பாமாலை சாற்றினாள் கோதை  பூமாலை மாற்றினாள்..!" என்ற வாழ்த்தொலிகள் எங்கும் நிறைந்திருந்தது.  


கோதை மெள்ள நடந்தாள். அவள் மனம் மாதவன் மேல் பித்தம் கொண்டிருந்தது. விஷ்ணுசித்தரை ஏறெடுத்தாள். பூமிப் பிராட்டியையே மகளாக்கிக்கொண்ட அந்த மாமனிதரின் திருவடிகளைத் தொழுதுகொண்டாள். அடுத்து அவள் தொழ வேண்டியவர்கள் எவரும் இல்லை என்பதை அவள் அறிவாள். நேரே அரங்கனின் சந்நிதியை அடைந்தாள். பள்ளிகொண்ட பெருமாளாய் படுத்திருக்கும் அரங்கனையும் தொழுதாள். தனது கழுத்திலிருந்த மாலையை அவனுக்குச் சாற்றினாள். அடுத்த கணம் மன்னவனும் மற்றவரும் கண்டுகொண்டிருக்க அவள் ஜோதி வடிவமாகி அரங்கனோடு இரண்டறக் கலந்தாள்.


அதைக்கண்டவர்கள் மனமும் உடலும் சிலிர்த்தனர். ரங்கா! ரங்கா! என்ற கோஷம் எழுந்தது.  

கண்ணனாக அவதரித்து உபதேசித்த கீதாச்சாரத்தின் பொருளை எளியவர்களுக்கு எடுத்துரைக்க பூமாதேவி கோதை நாச்சியாராய் அவதரித்த கதை இது. 


``தமதனைத்தும் அவர்தமக்கு வழங்கியும் தான் மிக விளங்கக் கூடியவன் பரந்தாமன்.." என்பதைக் காட்டியது கோதையின் வாழ்க்கை மட்டுமல்ல, அவள் அருளிய திருப்பாவையும்தான்.!


திருப்பாவைப் பாடல்களை உற்றுக் கவனித்தோமேயானால் ஒன்றை விளங்கிக்கொள்ளலாம். அதன் முதல் பத்து பாசுரங்கள் 'இறைவனது பெயரைப் பாடு’ என்று வலியுறுத்தும் இரண்டாவது பத்து பாசுரங்கள் `இறைவனின் திருவடிகளில் புஷ்பங்களை இட்டு அர்ச்சனை செய்..' என்று வழிகாட்டும்.                                                                                                                       


மூன்றாவது பத்து பாசுரங்கள் `அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் செய்..' என்று வழிகாட்டும்.

``மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு 

மாமே வைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோஸி மே..

(பகவத் கீதை 18:65)


``என்னை அடைய, என்னிடம் மனதை வை. என் பக்தனாக இரு. என்னை வழிபடு. என்னையே வணங்கு. இதைச் சத்தியம் செய்து உனக்குக் கூறுகிறேன்.." என்று பகவான் கீதையில் சாற்றிய மறையைத்தான், இந்த முப்பது பாடல்களில், எளிய, இனிய தமிழில் நமக்குக் எடுத்துக் கொடுத்துவிட்டாள் கோதை. 


``கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல்" சொல்லி மார்கழி நோன்பிருப்பவர்கள் திருமாலின் திருவருளையும், அனைத்துச் செல்வங்களையும் ஒருங்கே பெற்று இன்புறுவர் என்பதை,

``செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்..." என்ற சாத்துமறையின் இறுதி வரிகள் நமக்கு உறுதியளிக்கிறது..!


நாமும் கோதையைப் போலவே மார்கழியில் கோதையின் திருப்பாவையைத் தவறாமல் பாடி, நம்மை இறைவனது பாதங்களில் சமர்ப்பித்து, அவனது திருவருளைப் பெற்று இன்புற்றிருப்போம் வாருங்கள்..!


``பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு.."


`ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்'

Monday, 7 December 2020

அக்ஷய திருதியை ஸ்பெஷல் !

 அக்ஷய திருதியை ஸ்பெஷல் !



குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம்!


பால்ய நண்பனான கண்ணனை தன் மனைவி கொடுத்தனுப்பிய அவலுடன் சென்று குசேலன் சந்தித்தது அட்சய த்ருதியை அன்று. அந்த நண்பன் கொண்டு சென்ற அவலை கண்ணனும் ருக்மிணியும் உண்டு குசேலனை குபேரனாக்கிய பொன்னாள் இது. இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். 


இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டினார் என்பது வரலாறு. 


குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்

கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:

த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ

தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ


ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா? கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா? 


ஸமான ஸீலாபி ததீயவல்லபா

ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ

கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே

ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே


குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான  கோபாலன் தாங்களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்லவா?


இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா

ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே

ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ

வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்


குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர்  கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும் பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா? 


கதோயமாஸ்சர்யமயீம் பவத்புரீம்

க்ருஹேஷு ஸைப்யா பவனம் ஸமேயிவான்

ப்ரவிஸ்ய வைகுண்டமிவாப நிர்வ்ருதிம்

தவாதிஸம்பாவனயா து கிம் புன: 

ஆச்சரியமான அழகைக் கொண்டுள்ள உன்னுடைய பட்டினத்தை அடைந்து ருக்மிணியுடன் நீ வசிக்கும் அரண்மனைக்குள் பிரவேசித்தபோது அவர் வைகுண்டத்தை அடைந்தவர்போல் ஆனந்தமானார். அதற்கும் மேலாக குசேலரை நீயே பூஜித்ததால் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே  இல்லை. அப்படித்தானே? 


ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம்

கரே க்ருஹீத்வாகதய: புராக்ருதம்

யதிந்தனார்த்தம் குருதாரசோதிதை

ரபர்த்துவர்ஷந் தமமர்ஷி கானனே


நீ குசேலனைப் பூஜித்தாய்; ருக்மிணி தேவியும் பூஜித்தார்கள். குசேலர் பேரானந்தமடைந்தார். அப்போது பழைய சில சம்பவங்களை நினைவுகூர்ந்தீர்களே? ஒருமுறை குசேலரும் நீயும் குருபத்தினிக்கு உதவுவதற்காக விறகு கொண்டு வர காட்டிற்குச் சென்றீர்கள். வரும்போது பெருமழையில் சிக்கினீர்களே? பொறுமையாக அந்த மழையைப் பொறுத்துக் கொண்டு விறகு கொண்டு வந்து குருமாதாவிடம் கொடுத்தீர்களல்லவா? 


த்ரபாஜுஷோஸ்மாத் ப்ருதுகம் பலாதத

ப்ரக்ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதாஸிதே த்வயா

க்ருதம் க்ருதம் நன்வியதேதி ஸம்ப்ரமாத்

ரமா கிலோபேத்யகரம் ருரோத தே


குசேலர் தான் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து வைத்திருந்த அவலை கொடுக்க கூச்சப்பட்டார். நீதான் குசேலரிடமிருந்து அவலை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி எடுத்து ஒரு பிடி சாப்பிட்டாய். அப்போது லக்ஷ்மியான ருக்மிணிதேவி, ‘‘இவ்வளவு போதும் போதும்’’ என்று உன்னைத் தடுத்து 

நிறுத்தினார்கள், இல்லையா? 


பக்தேஷு பக்தேன ஸமானிதஸ்த்வயா

புரீம் வஸன்னேகநிஸாம் மஹாஸுகம்

பதாபரேத்யுர்த்ரவிணம் வினா யயௌ

விசித்ரரூபஸ்தவ கல்வனுக்ரஹ :


உன்னால் பூஜிக்கப்பட்ட அந்த குசேலர் ஓர் இரவு மகா சுகமாய் உன் பட்டினத்தில் தங்கி, மறுதினம் உன்னிடமிருந்து எந்தப் பொருளையும் யாசிக்கவோ, பெறாமலோ தன் இருப்பிடம் திரும்பினாரல்லவா? இப்படி குசேலருக்கு நீ செய்த அனுக்கிரகம் விசித்திரமானதல்லவா? 


யதி ஹ்யயாசிஷ்யமதாஸ்யதச்யுதோ

வதாம பார்யாம் கிமிதி வ்ரஜன்னஸௌ

த்வதுக்திலீலாஸ்மிதமக்னதீ: புன:

க்ரமாதபஸ்யன் மணிதீப்ரமாலயம்


‘நான் யாசித்திருந்தால் அச்சுதன் கொடுத்

திருப்பார். மனைவியிடத்தில் என்னவென்று சொல்வேன்’ என்று யோசித்தபடியே தன் ஊருக்கு நடந்து சென்றாலும் அவர், உன் பேச்சின் ரஸம், அழகிய சிரிப்பு இவற்றில் தம்மை மறந்தபடியே பயணப்பட்டார். ஆனால் ஊருக்குள் நுழைந்தபோது நவமணிகளால் பிரகாசிக்கும் தன் வீட்டைப் பார்த்துத் திகைத்தாரல்லவா? 


கிம் மார்கவிப்ரம்ஸ இதி ப்ரமன்க்ஷணம்

க்ருஹம் ப்ரவிஷ்டஸ்ஸ ததர்ஸ வல்லபாம்

ஸகீபரீதாம் மணிஹேமபூஷிதாம்

புபோத ச த்வத்கருணாம் மகாத்புதாம்


‘ஆஹா, நான் கிருஷ்ண சிந்தனையில் திசை தவறி வந்து விட்டேனோ!’ என்று கண நேரம் குழம்பினார். பிறகு பிரமித்துப்போய் தனது வீட்டிற்குள் நுழைந்தார். சகிகளால் சூழப்பட்டவளும் ரத்தினம், தங்கம் முதலிய ஆபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டவளுமான பத்தினியைப் பார்த்தார். உடனே, மிகவும் ஆச்சரியமான உனது கருணையை அப்போது அவர் உணர்ந்தாரல்லவா? 


ஸ ரத்னஸாலாஸு வஸன்னபிஸ்வயம்

ஸமுன்னமத்பக்தி பரோம்ருதம் யயௌ

த்வமேவமாபூரித பக்தவாஞ்சிதோ

மருத்புராதீஸ ஹரஸ்வ மே மதான்.


ஹே குருவாயூரப்பா! ரத்தினமயமான வீட்டில் வசித்த அந்த குசேலர் மேலும் மேலும் செல்வ விருத்தியடைந்தது போலவே உன் மீதான பக்தியையும் விருத்தி செய்து கொண்டவராகவே வாழ்ந்து இறுதியில் மோட்சமடைந்தார் அல்லவா? இதைப்போலவே பக்தர்களின் இஷ்டத்தை பூர்த்தி செய்த நீ, எனது ரோகத்தையும் போக்க வேண்டும்.


 ஸ்ரீ க்ருஷ்ணா உன் திரு வடிகளே சரணம் !

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...