Wednesday, 6 February 2019

#மஹாம்ருத்யுஞ்ஜய_மந்திரத்தின்_ #அபூர்வ_பலன்களும்...

#மஹாம்ருத்யுஞ்ஜய_மந்திரத்தின்_
#அபூர்வ_பலன்களும்... அதை பிரயோகிக்கும் அபூர்வ வழிமுறைகளும்....
விரிவான விளக்கத்துடன்...
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

அண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம்.

அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம்.

எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன.

இதையே சித்தர்களும், ரிஷிகளும் சக்ரங்களை தாமரை மலராக வடிவமைத்து, அதை சுற்றி உள்ள சக்தி மையங்களை இதழ்களாகவும், அதில் ஒலிக்கும் ஓசையை அக்ஷரங்களைச் சேர்த்து மந்திரங்களாக்கித் தந்தார்கள். அந்த குறிப்பிட்ட அக்ஷரத்தை ஒலித்து ஓசையை இடைவிடாது எழுப்பும் போது, பிண்டத்திலுள்ள அந்த குறிப்பிட்ட சக்தி மையம் தூண்டப் பெற்று குறிப்பிட்ட சக்திகள் விழிப்படைந்து அந்த இயக்கம் வலுவடையும் போது காரிய சித்தி ஏற்படுகிறது. அந்த சக்திக்கு அடையாளம் தருவதற்காக அதற்கு பெயர்களும் வடிவமும் தரப்பட்டன.

உதாரணமாக சிவபெருமானின் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எடுத்துக் கொண்டால் அதில் 33 எழுத்துக்கள் உள்ளன. இந்த 33 எழுத்துக்களிலும் உள்ள சக்திகளும் சிவத்தோடு சேர்ந்து நம் உடலில் 33 இடங்களில் நின்று இயங்கி வருவதாக வசிஷ்ட மகரிஷி கூறுகிறார். இந்த மந்திரத்தை ஜபம் செய்யும் போது அந்த சக்திமையங்கள் விழிப்படைந்து பிரபஞ்சத்திலிருந்து அந்த சக்திகளைத் தடையின்றி ஈர்த்து ஜீவனை பலமுள்ளவனாகவும், ஆயுள் உள்ளவனாகவும் ஆக்கி காக்கிறது. மரணத்தை வெல்லும் மந்திரமாக மிருத்யுஞ்ஜய மந்திரம் சொல்லப்படுகிறது. த்ரியம்பகம் என்ற சொல்லுக்கு பல்வேறு கருத்துக்களை நம் முன்னோர்கள் முன் வைக்கிறார்கள். முக்கண் என்பார்கள். அதாவது வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், நெற்றிக்கண் அக்னி. இதுவே யோகநிலையில் சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை அதாவது அக்னி கலை எனப்படுகிறது.

மூன்று சக்திகளையும் (இசஞ்சா சக்தி, க்ரியா சக்தி, ஜ்ஞான சக்தி) உடையவர் என்பதால் த்ரியம்பகன் . சத்துவம், இராஜஸம், தாமஸம் என்ற முக்குணங்களைக் கொண்டு ஜீவனில் நிலைப்பதால் முக்குணங்களை முக்கண்ணாக உடையவர் என்பர் சிலர்.

வேதாந்தம் சித்தம், அஹங்காரம், புத்தி மூன்றையும் முக்கண்ணாகக் குறிப்பிடுகின்றது. இப்படி பல் வேறு கருத்துக்களையும் கூர்ந்து கவனித்தால், எல்லா கருத்துக்களும் யோக நிலையில் மேன்மையடையும் விஷயங்களைக் குறித்தே சொல்லப்பட்டிருப்பது புரியும். ம்ருத்யு என்றால் அஞ்ஞானம்.

அஞ்ஞானத்தை நீக்கி சம்சார பந்தத்திலிருந்து ஜீவனை ரட்ஷிக்கும் மந்திரம். இதுவே மரணத்தை வெல்லும் மந்திரம்.

இந்த மந்திரத்தை இலட்சம் தடவை உச்சாடனம் செய்ய வைத்து யாகம் செய்தால் நூறு வயதைத் தாண்டி வாழலாம் என்றும், சாகக் கிடப்பவர் பிழைத்து விடுவார் என்றும் சிலர் நினைக்கிறார்கள். அது அவ்வாறல்ல. பணம் பறிப்பவர்கள் சொல்லும் கட்டுக் கதை அது.

எவர் ஒருவர் தனக்குத் தானே அந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து இடைவிடாது மனதில் உச்சரித்துக் கொண்டிருக்கிறாரோ, அவர்தம் சக்தி மையங்கள் விழிப்படைந்து ஆதாரச் சக்கரங்கள் தூய்மை பெற்று, சுழு முனையாகிய மூன்றாவது கண் திறந்து, அதாவது ஞானம் பெற்று பிறப்பில்லாத நிலையை அடைவார். அதாவது மரணத்தை வெல்வார்.

இந்த மந்திரமானது
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*''த்ர்யம்பகம் யஜாமஹே*
*ஸுகந்திம் புஷ்டிவர்த்தனம் |*
*உர்வாருக மிவ பந்தனாத்*
*ம்ருத்யோர் முக்ஷீயமா அம்ருதாத் ||''*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
பந்தத்தை நீக்கி மரணத்தை வெல்லும் நிலையைத் தரும் மந்திரம். இடைவிடாது இந்த மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு குண்டலினியானவள் விழிப்படைந்து ஆறு ஆதாரங்களையும் சுலபமாகக் கடந்து சஹஸ்ராரத்தை அடைவாள். அதற்குத் தோதாக எல்லா சக்தி மையங்களும், ஆறு ஆதாரங்களும் தூய்மையடைந்து சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும். எனவே ப்ரபஞ்ச சக்தியோடு தொடர்பு ஏற்பட்டு குண்டலினியைத் தாங்கும் வலிமை தேகம் பெற்று விடும்.

இப்போது இந்த மந்திரத்திலுள்ள எந்தெந்த வார்த்தைகளை உச்சரிக்கும் போது எந்தெந்த சக்கரங்களில் உள்ள சக்திகள் சிறப்பாக இயங்கும் என்பதையும், அந்த சக்திகளோடு கூடிய சிவனின் பெயர்களையும் காண்போம்.

*த்ர்யம்பகம் - பூதசக்தி ஸஹித பவேச போதகர் - மூலாதாரச் சக்கரம்.*

*யஜாமஹே - சர்வாணீ சக்தி ஸஹித சர்வேச போதகர் - சுவாதிஷ்டானம்.*

*ஸுகந்திம் - விரூபா சக்தி ஸஹித ருத்ரேச போதகர் - மணிபூரகம்.*

*புஷ்டிவர்த்தனம் - வம்ச வர்த்தினி சக்தி ஸஹித புருஷவரதேச போதகர் - அநாஹதம்.*

*உருவாருகமிவ - உக்ரா சக்தி ஸஹித உக்ரேச போதகர் - விசுத்தி.*

*பந்தனாத் - மானவதீ சக்தி ஸஹித மஹாதேவேச போதகர் - ஆக்ஞா.*

*ம்ருத்யோர்முக்ஷீய - பத்ரகாளி சக்தி ஸஹித பீமேச போதகர் - சகஸ்ராரம்.*

*மாஅம்ருதாத் - ஈசானி சக்தி ஸஹித ஈசானேச போதகர் - சகஸ்ராரம்.*

சக்தியை வளர்த்து ஜீவனை அமிர்தமயாக ஆக்கி முக்தி நிலைக்கு கொண்டு சேர்க்கும் தாரக மந்திரம். இந்த மந்திரங்களை கடவுளே இல்லை என்று சொல்பவர்கள் கூட உச்சரிக்கலாம். பலன் நிச்சயம். பக்தியோடு உச்சரிப்பவர்கள் மனமும் வசப்படுவதால் எளிதில் காரியம் சித்தியாகும். இந்த விளக்கங்களெல்லாம் அறிவைப் பேரறிவு நிலைக்குக் கொண்டு செல்ல முனைபவர்களுக்காகவே சொல்லப்பட்டுள்ளது.

இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) காணப்படுகிறது. இம்மந்திரத்தைக் கண்டறிந்தவர் மார்கண்டேய முனிவர். இது முக்கண்களையுடைய சிவபிரானிடம், சாகாமையை வேண்டுவதாக அமைந்துள்ளது.

*ஓம் த்ரயம்பகம் யஜாமஹே*
*ஸுகந்திம் புஷ்டிவர்தனம் l*
*உர்வாருகமிவ பந்தனாத்* *ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத் ll*

*மந்திரத்தின் அர்த்தம்.

*| ஓம் |* பிரணவ மந்திரம் ஆகும்.

*| த்ர்யம்பகம் |* த்ரி என்றால் மூன்று, அம்பகம் என்றால் கண். முக்கண் என்பதே இதன் பொருளாகும்.

*| யஜாமஹே |* என்றால் நாங்கள் அன்போடு வணங்குகிறோம் எனப் பொருள்படும்.

*| ஸுகந்திம் |* என்றால் நறுமணம் வீசுகின்ற எனப் பொருள்படும்.

*| புஷ்டி வர்தனம் |* என்றால் எக்குறையும் இல்லாத, நிறைவான, போதுமான வாழ்க்கையை எப்போதும் அளிப்பவர் சிவபெருமான் எனப் பொருள்படும். மேலும், நோயில்லாத ஆரோக்யமான வாழ்க்கையை தந்து மனவலிமையையும் உடல் பலத்தையும் அதிகரிக்க வல்லவர் சிவபெருமான். நம் வாழ்க்கையை முழுமைப்படுத்துவதே சிவபெருமான்.

*| உர்வாருகமிவ |* என்றால் உயிரைக் கொல்லக் கூடிய கொடிய நோய்களாக இருந்தாலும், உடலை வறுத்தக் கூடிய நோய்களாக இருந்தாலும், எவ்வகையான நோய்களாக இருந்தாலும் அவற்றை நீக்கி எங்களைக் காத்து அருள் புரியவேண்டும் இறைவா எனப் பொருள்படும்.

*| பந்தனான் |* என்றால் பந்தங்களிலிருந்து எனப் பொருள்படும். இதை நாம் அடுத்த வரியோடு சேர்த்துச் செப்பித்தால் அர்த்தமாகும்.

*| ம்ர்த்யோர் முக்ஷீய |* என்றால் மரணங்களிலிருந்து விடுதலை அடைய செய்யுங்கள் எனப் பொருள்படும். முதலில் நோய்களை நீக்க வேண்டினோம். இப்போது மரண பந்தங்களில் இருந்து நம்மைக் காத்து, மரணமே நேராமல் விடுதலை தாருங்கள் என வேண்டுகிறோம். இதற்கு மற்றொரு அர்த்தமும் உண்டு.

*‘பந்தனான் ம்ர்த்யோர் முக்ஷீய’* என்றால் இறப்பு என்பது நிச்சயம். ஒருவேளை இறந்துவிட்டால், இனி நாங்கள் பிறக்கவேண்டாம். மீண்டும் பிறந்து துன்பப்பட்டு இறக்கவேண்டாம். எங்களுக்கு மோக்ஷம் அளியுங்கள் இறைவா எனப் பொருள்படும்.

*| மாம்ர்தாத் |* என்றால் எங்களை மரணத்தில் இருந்து காத்து, மரணமே இல்லாதவர்களாய் செய்யுங்கள் எனப் பொருள்படும்; இறந்தாலும் இறப்பே இல்லாதவர்களாக இருக்க அருள்புரியுங்கள் இறைவா எனவும் பொருள்படும்.

முன்னதாக, நாம் இனி பிறப்பே வேண்டாம், எங்களுக்கு மோக்ஷம் தாருங்கள் என வேண்டினோம். இப்போது, இறந்தாலும், மோக்ஷம் பெற்று என்றுமே அழியாதவர்களாக உங்களோடு (இறைவனோடு) இருக்க அருள்புரியுங்கள் என வேண்டுகிறோம்.

*சுருக்கமான அர்த்தம் –*

ஓம். நாங்கள் முக்கண்ணுடைய இறைவனை அன்போடு வேண்டுகிறோம். உங்களின் திருவருளால் எங்களின் வாழ்வு என்றுமே எந்த குறைகளும் இல்லாமல் நறுமணம் வீசுகின்றது. எங்களை நோய்களில் இருந்து காத்து, மரணப்பிடியில் இருந்து மீட்டு அருள்புரியுங்கள், இறைவா. இறப்பு நிச்சயம் என்றால், எங்களுக்கு மோக்ஷம் தந்து என்றுமே உங்களோடு இணைந்திருக்க அருள்செய்யுங்கள்.

*மந்திரத்தின் பொருள்:-*

ஓம் முக்கண்ணுடையவரே! எல்லா வளமும், எல்லா நலமும் பெருகும்படிச் செய்பவரே! நாங்கள் உம்மை யாகத்தினால் பூசிக்கிறோம். வெள்ளரிப் பழம் போல, என்னை இறப்பின் பிடியில் இருந்து விடுவித்து, எனக்கு இறவாமையை அருளும்.

*விளக்கவுரை:-*

ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் பொதுவானது. அதைத் தனியாக உச்சரிக்க சன்யாசிகளுக்கு மட்டுமே உரிமையுள்ளது. ஆகையால், மற்றோர்களும் அதை உச்சரித்துப் பயன் பெற வேண்டும் என்பதற்காக, அந்த ஓரெழுத்து மந்திரம் அனைத்து மந்திரங்களுக்கும் முதலில் உச்சரிக்கப் பெறுகிறது. இங்கும் அதுவே பின்பற்றப்பட்டுள்ளது.

சிவபிரானுக்கு மற்ற பல அங்க அடையாள, அணிகலன்கள் இருக்க, இங்கு அவர் முக்கண்ணரே! என விளிக்கப்படுகிறார். காரணம், மற்றெந்த தெய்வத்திற்கும் இல்லாத இந்தச் சிறப்பை உடையவரே, மற்றெந்த தெய்வத்தாலும் அளிக்க இயலாத, பின்னால் கேட்கப் போகும் (இறவாமை என்ற) வேண்டுகோளை நிறைவேற்ற சக்தியுள்ளவர் என்று சுட்டிக் காண்பிப்பதற்காகவே ஆகும். மூன்றாவது கண்ணால் காமவேளை எரித்தவருக்கு, அதேபோல, யமனை எரிப்பது ஒரு பெரிய காரியமல்ல என்று கூறுவதுவும் ஏற்புடையதே.

சிவபெருமான் காரணமின்றியே, அவர் மீது பக்தி இல்லாவிடினும், அருள் செய்து (இதற்கு வடமொழியில் ’அவ்யாஜ கருணா’ அல்லது ’நிர்ஹேதுக க்ருபா’ என்று பெயர்), நறுமணத்தையும், ஊட்டத்தையும் அளிக்கிறார். அவர் மீது நமது பக்தி கூடக் கூட, அவற்றை அதிகரிக்கச் செய்பவர் என்பதையே ’வர்தனம்’ என்ற சொல் உணர்த்துகின்றது.

நறுமணம் என்பது மனமகிழ்ச்சி, போன்ற உள்ளம் சார்ந்த வளங்களையும், ’புஷ்டி’ என்பது உடலுடன் தொடர்புடைய நோயின்மை, சுகம் என்ற நலன்களையும் சுட்டுகின்றன.

வடமொழியில் ’யஜனம்’ என்றால் யாகம் செய்தல் என்று பொருள். பொதுவாக பூசிப்பது என்பது பொருளானாலும் சிறப்பாக யாகத்தால் பூசிப்பதையே குறிக்கிறது.

மரத்தில் ஏற்றி விடப்பட்ட வெள்ளரிக் கொடியில் காய் காய்த்துப் பழுக்கிறது. பக்குவம் வந்தவுடன் பழம் கொடியிலிருந்து விடுபடுகிறது. நிலத்தில் விழும் அதற்கு என்ன நேருகிறது? அதே கொடி நிலத்தில் படருகிறது, காய்க்கிறது, பழுக்கிறது. பழம் எடை கூடுதலாக இருப்பதால், பக்குவம் வந்தவுடன், பழத்திற்குச் சேதமில்லாமல், கொடி பழத்திலிருந்து விடுபடுகிறது. அந்த நிலையே இங்கு விளக்கப்பட்டுள்ளது. நம்மைப் தன்பால் பிணைத்து வைத்துக் கொண்டுள்ள இறப்பு, நம்மிடம் இருந்து விலக அருள் புரிய வேண்டும் என வேண்டப்படுகிறது.

வெள்ளரிக்காய் பழுத்த உடனேயே கொடி அதை விட்டுப் பிரிவதில்லை. பக்குவம் வர வேண்டியதுள்ளது. அதுபோல, சாகாமையை வேண்டினாலும் பக்குவம் வரும் போதுதான் அதை அடைய முடிகிறது. அதுதான் குருவருள். இறையருள் கிடைத்தாலும், குருவருளின்றிக் காரியம் கை கூடாது என்பது இங்கே, அதாவது பக்குவம் வந்தபோது தானாக விடுபட்டுப் போகும் கொடியினால், குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.

இறவாமை என்றால் என்ன?
பிறந்த உடனேயே சாவதும் உறுதி. எவரும், எதுவும் நிலையல்ல; அப்படியிருக்க இறவாமையை எப்படி வேண்டிப் பெற முடியும்? இறவாமை, இப்பொழுது எடுத்துள்ள இப்பிறவியில் அல்ல. இனிப் பிறந்து-பிறந்து, இறந்து-இறந்து இளைக்காமல் இருப்பதுவே வேண்டப்படுகிறது
. அதற்கு இம்மனிதப் பிறவி ஒரு கருவியாக இருக்கிறது.

இம்மாதிரியான மந்திரங்களைச் சொல்லி, கேட்டு, சிந்தித்து, உணர்ந்து பயன் அடைய முடிகிறது.

எந்த மந்திரத்தை உச்சரித்தாலும், அதற்கேற்ற பயன் கிடைப்பது உறுதி. அதில் ஐயமில்லை.
ஆனால் ஒலிநாடா சொல்லிக் கொண்டிருப்பது போலன்றி, அதன் பொருளறிந்து சொல்லுவது, பன்மடங்கு பயனை, உடனே அளிக்க வல்லது.

மந்திரம் செப்பும் ஒழுக்கநெறி
இம்மந்திரத்தை உடலில் திருநீறு இட்டுக்கொண்டு, ருத்ராட்சை மாலை அணிந்துகொண்டு செப்பிக்கலாம். (இம்மந்திரத்தை சரியாக உச்சரித்தால்) இம்மந்திரத்தால் எழும் சக்தி, நமக்கு புதிய தெம்பை அளித்து மனத்திற்கு தைரியத்தை அளிக்கும். நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இம்மந்திரத்தைச் செப்புவது அவர்களின் மனதிற்கு ஒரு தெம்பை தரும். மேலும், சிவபெருமானின் அருளால் அவர்களுக்கு நல்பேறு கிட்டும்.

எப்படி காயத்ரி மந்திரம் மனத்தை தூய்மைப்படுத்தி ஆன்மீகத்தில் ஈடுபட நம்மை தயார்ப்படுத்துகிறதோ, அதுபோல மஹாம்ரித்யுஞ்சாய மந்திரம் நம் உள்ளத்திலும் உடலிலும் இருக்கும் பிணிகளை நீக்க துணைபுரியும்.

நமது உடம்பில் சிரசு (தலை) மேலானது. எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம். அதற்கு மேல் இருப்பது சிகை.சிகைக்கு மேல் ஒன்றும் இல்லை. *நமது சைவ சாத்திரத்தில் மந்திரங்கள் 11*
1,ஒம் ஈசானாய நமஹ
2.ஒம் தத்புருஷாய நமஹ
3,ஓம் அகோரா ய நமஹ
4,ஒம் வாமதேவா ய நமஹ
5,ஒம் சத்யோஜாதா ய நமஹ
6,ஓம் ஹ்ருதாய நமஹ
7,ஒம் சிரசே நமஹ
8,ஒம் சிகாயை நமஹ
9,ஓம் கவசாய நமஹ
10,ஒம் நேத்ரோப் யோ நமஹ
11,ஒம் அஸ்த்ராய நமஹ

இதில் 8 வது மந்திரம் சிகாயை நமஹ . எட்டாம் திருமுறையாக
சிகாமந்திரமாக விளங்கும் திருவாசகத்திற்கு மேல் சிறந்த நூல் இல்லை முதல் ஐந்து மந்திரமும் பஞ்சப் பிரம மந்திரம் . அடுத்த ஆறும் சடங்க மந்திரம் .இந்த 5+ 6 சேர்ந்துசம்மிதா மந்திரம் எனப்படும். கல்லை கனியாக்கும் திருவாசகத்தை கலந்து பாடினால் ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டா இன்பம் அருளி முக்தி நெறி அளிக்கும்.

#ஒம்_நமசிவாய_🙏

லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

லலிதா சகஸ்ரநாமம் கூறும் பொழுது நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள்?

லலிதா சகஸ்ரநாமத்தில் என்ன விசேஷம் என்றால், ஒருமுறை கூறப்பட்ட நாமம் மற்றொரு முறை உபயோகப்படுத்தப் பட்டிருக்காது.

லலிதா சகஸ்ரநாமத்தில் மட்டும் தான் தேவி ஸ்வரூபம், தோன்றிய வரலாறு,  அவளை வழிபட யந்திரம்,  மந்திர பரிவார தேவதைகளின் நிலை,  வழிபாட்டு முறை, அவள் அருளால் பெறக்கூடிய மேன்மைகள் ஆகியவைகளை வாக்தேவதைகளே கூறுவதால், வேதத்திற்குச் சமமாகக் கூறப்படுகிறது.

"ஸ்ரீ மாதா" என்று அழைக்கப்படும் ஸ்ரீ லலிதையானவள், எப்படித் தோன்றினாள்?

அசுரர்களின் இடையூறுகளையும், இன்னல்களையும் தாங்கமுடியாமல், தேவர்கள், யாகம் வளர்த்து, அம்பாளை வேண்டி நின்றனர். அவளை வரவழைக்க, தங்களின் தேகத்தையே யாகத்தில் அர்ப்பணிக்கத் தயாரானார்கள். அப்பொழுது ஞானமாகிய குண்டத்திலிருந்து ஆதிசக்தியானவள் தோன்றினாள்.

சக்திகளுக்குள் ஸ்ரீ லலிதா போல் வேறெந்த சக்தியும் இல்லை என்று கூறுவார்கள். மந்திரங்களில், ஸ்ரீ வித்யையைப்போல், நகரங்களில் ஸ்ரீ புரம் போல், ஸ்ரீ வித்யை உபாசகர்களில் ஸ்ரீ சிவனைப்போல்,  சகஸ்நாமங்களில் லலிதா சகஸ்ரநாமம் போல் என்று மேன்மை வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.

நமது முதுகுத் தண்டின் அடியில், கிண்ணம் போன்ற அமைப்பு உள்ளது. இதுதான் 'மூலாதாரம்'  என்று கூறப்படுகிறது. நாம் மனதை ஒருநிலைப்படுத்தி, சகஸ்ரநாமம் சொல்லும் பொழுது, நாபிக்கடியில் இருக்கும் சக்தியை, மந்திரத்தின் அழுத்தம் சீண்டி விடுகிறது. அந்த சக்தியானது, மேலே எழும்பி, சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்யை, பிறகு சகஸ்ராரம் என்கிற கடைசி நிலையை வந்தடைகிறது.

சகஸ்ராரம் என்னும் சிகரத்தில்தான் ஸ்ரீ சிவன் இருப்பதாகக் கூறப்படுகிறது. சகஸ்ராரத்தில், அதாவது சிகரத்தில், கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்தில் அமிழ்தம் உள்ளது. கீழிருந்து எழும்பிய சக்தி,  சிகரத்தில் உள்ள சிவனோடு சேரும் பொழுது, கவிழ்ந்த நிலையில் உள்ள கிண்ணத்திலிருந்து, அமிழ்தம் கொட்டுவதாக அறியப்படுகிறது. அப்பொழுது, அவள் சிவசக்தி ஸ்வரூபிணியாகவே நமக்குக் காட்சி கொடுப்பாள் என்று கூறப்படுகிறது.

லலிதா சகஸ்ரநாமம் படிப்பதால், கங்கை போன்ற புண்ணிய நதிகளில் முறைப்படி நீராடுதல், அவிலிங்க க்ஷேத்திரத்தில், கோடி லிங்கங்கள் பிரதிஷ்டை செய்தல், அஸ்வமேத யாகம் செய்தல், அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும் விட மேன்மையானது என்று கூறப்படுகிறது.

இப்பொழுது புரிகிறதல்லவா? நாம் ஏன் லலிதா சகஸ்ரநாமத்தை சிரத்தையுடன் கூறவேண்டும் என்பதை?

விழிப்பு நிலை, உறக்க நிலை இரண்டிலுமே நம்முடன் தேவி எப்பொழுதுமே இருக்கிறாள். வாக்தேவிகள் மொழிய, ஸ்ரீ ஹயக்ரீவரால் தெளியப் படுத்தப்பட்ட ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தினை நாம் அனுதினமும் நவிலுவோம். நிறைவான வாழ்வினைப் பெறுவோம்.

#சியாமளா_நவராத்திரி

#சியாமளா_நவராத்திரி

By - அஸ்ட்ரோ சுந்தரராஜன்|
 
நாளை (5/2/2019) முதல் சியாமளா நவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது. முக்கியமாக ச்யாமளாவின் அம்சமாகத் திகழும் #மதுரை_மீனாக்ஷிக்கு #சியாமளா_நவராத்திரி விஷேசம் என்பது குறிப்பிடத்தக்கது. 

சியாமளா நவராத்திரி பூஜை
தை அமாவாசை கழிந்த மறுநாள் பிரதமையிலிருந்து நவமி வரை (05.01.2019 - 14.02.2019) அம்பிகையை, பூரண கலசத்தில் ஆவாஹனம் செய்து, பூஜிக்கலாம். சியாமளா நவராத்திரியில் ஐந்தாவது தினமான வசந்த பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவி திருஅவதாரம் செய்ததாக ஐதீகம். எனவே, தென்னாட்டில் விஜயதசமி போல், வடநாட்டில் வசந்த பஞ்சமி அன்று வித்யாரம்பம் செய்கிறார்கள். அன்றைய தினம் அம்பிகையை வழிபடுபவருக்கு, கலைகள் அனைத்திலும் நிறைந்த பேராற்றல் கிட்டும்.
சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். கல்வி அறிவைத் தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி. கலைவாணியான சரஸ்வதி தேவியின் ஸ்வரூபமான ச்யாமளாதேவியை பிரதானமாகக் கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாட்கள் தான் ச்யாமளா நவராத்திரி தினங்களாகும்.

கலைத் தெய்வம் என்றே சொல்கிற சரஸ்வதி கையில் வீணை இருக்கிறது. வீணைதான் நம் ஸங்கீதத்துக்கே ஜீவநாடி என்பார்கள். அதனால் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உள்ள வீணைக்கென்று ஒரு பெயர் உண்டு.‘கச்சபி’ என்பது சரஸ்வதியின் வீணை. ‘விபஞ்ச்யா காயந்தீ’ என்ற ‘ஸெளந்தர்ய லஹரி’ஸ்லோகத்தில்,சரஸ்வதியானவள் அம்பிகையின் ஸந்நிதியிலே சிவலீலைகளை வாயால் பாடிக்கொண்டே ‘விபஞ்சி’வாசிக்கிறாள் என்று ஆசார்யாள் வர்ணித்திருக்கிறார். ‘விபஞ்சி’ என்பது வீணைக்கு ஒரு பொதுப் பெயர்.
சங்கீத தேவதையாகச் சொல்லும்போது ராஜ மாதங்கி, ராஜ ச்யாமளா என்று பெயர் கூறுவார்கள். இவளும் ஸரஸ்வதியைப் போலவே கையில் வீணை வைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. “வீணா ஸங்க்ராந்த காந்த ஹஸ்தாம்”. நிறத்தில் மட்டும் அவளுக்கும் இவளுக்கும் நேர் வித்யாஸம். சரஸ்வதி நல்ல வெளுப்பு. இவளே சாம்பல் கருப்பு. அதனால்தான் ‘ச்யாமளா’ என்று பெயர்.

சாக்தமும் நவராத்திரிகளும்
நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்ப்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அவற்றில் சாக்த வழிபாடு மிகவும் புராதனமாகவும் போற்றத்தக்கதாகவும் விளங்குகிறது. 
இந்து மதத்தின் சிறப்புமிக்க சாக்த வழிபாட்டில் அன்னை தெய்வங்களை போற்றும் விதமாக நவராத்திரி வழிபாடுகள் சிறப்பு மிக்கதாகும். பருவ காலங்களுக்கு ஏற்ப ஒன்பது நாட்களை நவராத்திரிகளாகக் கொண்டு சக்தி தெய்வங்களை வணங்குவது மரபு. ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம்.
வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி).
(பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
ஆனி மாதத்தில் கொண்டாடப்படுவது ஆஷாட நவராத்திரி.
(ஆனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்) புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது சாரதா நவராத்திரி. (புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)
தை மாதத்தில் கொண்டாடப்படுவது ச்யாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்)

சியாமளா தேவி
சியாமளா என்றும்,
'ஸ்ரீ ராஜ ச்யாமளா என்றும், ஸ்ரீமாதங்கி என்றும், 'மஹாமந்திரிணீ' என்றும் பலவித திருநாமங்களால் போற்றப்படும் ஸ்ரீ அம்பிகை, மதங்க முனிவரின் தவப்புதல்வியாக அவதரித்தருளியவள். #தசமஹாவித்யைகளுள்_ஒன்பதாவது_வித்யையாகஅறியப்படுபவள். கலைகள், பேச்சுத்திறன், நேர்வழியில் செல்லும் புத்தி, கல்வி, கேள்விகளில் மிக உயர்ந்த நிலையை அடையும் திறன் ஆகியவற்றுக்கு அதிபதியாக அறியப்படுபவள். வேத மந்திரங்களுக்கு எல்லாம் அதிதேவதை ஆதலால் 'மந்திரிணீ' என்று அறியப்படுபவள்.
 ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் மஹாமந்திரியாக, இவ்வுலகை ஆட்சி செய்து அருளுபவள். இந்த அம்பிகையைப் போற்றும் விதமாகவே ச்யாமளா நவராத்திரியைக் கொண்டாடி வழிபடுகிறோம்.
ஸ்ரீ ராஜ மாதங்கி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியால், தன் கரும்பு வில்லில் இருந்து உருவாக்கப்பட்டவள். அம்பிகையின் பிரதிநிதியாக, ராஜ்ய பாரம் நடத்துபவள். அம்பிகையின் முத்ரேஸ்வரியாக, (முத்திரை மோதிரம் தாங்கியவளாக) இருப்பவள். இதை ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம், வெவ்வேறு விதமான புராணங்களிலும் தாந்தீரிக முறைகளிலும் வெவ்வேறு விதமாக அம்பிகையின் திருவுருவம் விவரிக்கப்படுகிறது.
கவி காளிதாசர் அருளிய #ஸ்ரீ_ச்யாமளா_தண்டகம், தியான ஸ்லோகத்தில், அம்பிகை, மாணிக்கக் கற்கள் பதித்த வீணையை வாசிப்பதில் விருப்பமுடையவளாக, எட்டுத் திருக்கரங்கள் உடையவளாக, மரகதப் பச்சை வண்ணம் கொண்டவளாக, திருமார்பில் குங்குமச்சாந்து தரித்தவளாக, தன் திருநெற்றியில், சந்திரகலையை அணிந்தவளாக, கரங்களில், கரும்பு வில், மலரம்பு, பாச அங்குசம் கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். அம்பிகையின் திருக்கரங்களில் கிளியும் இடம்பெற்றிருக்கிறது.
இதில் அம்பிகையின் மரகதப் பச்சை வண்ணம், ஞானத்தைக் குறிக்கிறது. வித்யாகாரகனான புத பகவானுக்கு உரிய நிறமும் பச்சையே. வீணை, சங்கீத மேதா விலாசத்தையும், கிளி, பேச்சுத் திறமை வாய்க்க அம்பிகையின் அருள் அவசியம் என்பதையும் ஆத்ம ஞானத்தையும் குறிக்கிறது. மலரம்பு கலைகளில் தேர்ச்சியையும், பாசம் ஈர்க்கும் திறனையும், அங்குசம் அடக்கியாளும் திறனையும், கரும்பு உலகியல் ஞானத்தையும் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
சில நூல்களில்,
ஸ்ரீ சியாமளா, பச்சை வண்ணம் உடையவளாக, சிரசில் சந்திரகலையை அணிந்தவளாக, நீண்ட கேசமும் புன்முறுவல் பூத்த அழகுத் திருமுகமும் உடையவளாக, இனிமையான வாக்விலாசம் உடையவளாக, ஆகர்ஷணம் பொருந்திய திருவிழிகள் உடையவளாக, கடம்ப மாலையும், பனை ஓலையினாலான காதணி மற்றும் பல்வேறு ஆபரணங்கள் தரித்து தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள்.

கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதைப் பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

வித்யாகாரகனின் அம்சமாகத் திகழும் மதுரை மீனாக்‌ஷி அம்மன் ராஜ மாதங்கி எனும் ச்யாமளாவாகவும் திகழ்கிறாள். மதுரை மீனாட்சிஷியை வணங்கிவந்தால் புதனால் ஏற்படும் தோஷங்கள் நீங்குவதோடு சிறந்த கல்வி மற்றும் கலை ஞானமும் பெருகும்.

நாளை முதல் ஆரம்பிக்கும் ச்யாமளா நவராத்திரி  நாட்களில் ச்யாமளா தேவியை வணங்கி கல்வி கடவுளான சரஸ்வதியில் அருளோடு சரஸ்வதி யோகத்தையும் பெற்று மகிழ்வோமாக!

#நன்றி  :  #தினமணி.

Tuesday, 5 February 2019

மஹா சிவராத்திரி

மஹா சிவராத்திரி


விஷ்ணுவுக்கு வைகுண்ட ஏகாதசி எப்படி முக்கியமோ அப்படி சிவ பக்தர்களுக்கு சிவராத்திரி மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் சிலர் தண்ணீர் கூட குடிக்காமல் முழுப் பட்டினி கிடந்து உபவாசம் அனுசரித்து மறுநாள்தான் சாப்பிடுவர். உலகு எங்கிலும் உள்ள சிவாலயங்களில் இரவு முழுதும் பூஜை பாராயணம், அபிஷேகம் ஆகியன நடைபெறும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் அன்று சிவனைத் தரிசிக்க லட்சக் கணக்கான மக்கள் கூடுவர்.

பசுபதி நாதர் கோவில் கொண்டுள்ள நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் இது பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிவராத்ரி நேபாள நாட்டின் தேசியத் திருவிழாவாகும். அன்று சிவனை அந்த நாட்டின் ராஜாவாக கருதி ராஜ மரியாதைகள் செய்வர். காசி எனப்படும் வாரணாசியிலோ மக்கள் கூடம் அலை மோதும்.

சிவராத்திரி தோன்றிய கதை நமக்கு முக்கியமான ஒரு செய்தியைத் தருகிறது. ஒருவன் அறிந்தோ அறியாமலோ சிவலிங்கத்துக்குப் பூஜை செய்தாலும் அவனுக்கு முக்தி கிடைக்கும் என்பதே அந்த செய்தி. சிவ ராத்திரி கதை மஹாபாரதத்தில் சாந்தி பர்வத்தில் பீஷ்ம பிதாமஹர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது கூறப்படுகிறது.

சித்ரபானு என்ற மன்னன் உபவாசம் இருந்தபோது அஷ்டவக்ரர் அங்கே வருகிறார். மன்னன் உபவாசம் இருப்பதன் காரணத்தை வினவியபோது அம் மன்னன் தனக்கு பூர்வ ஜன்மத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாகக் கூறுகிறான். முன் ஜன்மத்தில் தான் ஒரு வேடன் என்றும் காட்டில் வேட்டையாடிய போது நேரம் ஆகிவிட்டதால் இரவுப் பொழுதை ஒரு மரத்தின் மீது கழித்ததாகவும் அதன் கீழே வந்து தங்கிய மானைக் கொன்று வீட்டுக்குக் கொண்டுபோக வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இலையாகப் பறித்து மானுக்குப் போட்டதாகவும் கூறுகிறான்.

காலையில் மானுடன் வீட்டுக்குச் சென்றபோது யாரோ ஒருவர் உணவு கேட்டு வந்ததால் அதைக் கொடுத்துவிட்டதாகவும் சிறிது காலத்துக்குப் பின் இறந்துவிட்டபோது சிவ தூதர்கள் இருவர் வந்து ராஜ உபசாரம் செய்து அழைத்துக் கொண்டு போனபோதுதான் முழு விஷயமும் தெரிய வந்ததாகவும் மன்னன் கூறுகிறான். அவன் இலைகளைப் பறித்துப் போட்ட மரம் சிவனுக்கு மிகவும் உகந்த வில்வ மரம் என்றும் மானுக்குப் போட்ட வில்வ இலைகள் அருகில் இருந்த சிவலிங்கம் மீதும் விழுந்ததால் எல்லா புண்யமும் வந்து சேர்ந்ததாகவும் மன்னன் கூறுகிறான்.

சிவனுக்குப் பூஜை செய்கிறோம் என்று தெரியாமல் வில்வத்தைப் போட்டாலும் கூட முழு புண்ணியமும் கிட்டும்..வேடனாக இருந்து செய்த பாபங்கள் கூட மன்னிக்கப் படும்.அறியாமல் செய்த புஜையானாலும் அடுத்த ஜன்மத்தில் மன்னர் பதவி கிட்டும் .
நன்றி -இணையதளம் .
     தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Wednesday, 23 January 2019


🍀#ஆதித்ய #ஹ்ருதயம் #ஸ்தோத்ரம்🍀
-
🍀#பூர்வாங்க #ஸ்தோத்ரம்🍀

ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||
-
#விளக்கம்: ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.

#ஸ்தோத்ரம் (1 இருந்து 30)

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||

விளக்கம்: ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.

தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||

#விளக்கம்: போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.

ராம ராம மஹா பாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
ஏன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||

#விளக்கம்: பலமான ஆயுதம் பொருந்திய ராம பிரானே, சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உனக்கு இப்போது சொல்கிறேன்.
-
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸ்ர்வ ஷத்ரு வினாஷனம் |
ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஷிவம் || 4 ||

#விளக்கம்: ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.
-
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரனாஷனம் |
ச்சிந்தா ஷோக ப்ரஷமனம் ஆயுர்வர்ததனம் உத்தமம் || 5 ||

#விளக்கம்: ஸர்வ ஸௌபாக்யங்களையும் அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.
-
ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் தனது பொன்னான கிரணங்களை எங்கும் பரப்புகிறார். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார். திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.
-
ஸ்ரவ தேவாத்மகோ ஹேஷ: தேஜஸ்வி ரஷ்மி பாவன: |
ஏஷ தேவாசுரகணான் லோகான் பாதி
 கபஸ்திபி: || 7 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் தனது ஒளிமிக்க கிரணங்களால், தேவர்களும் அசுரர்களும் கூட அடங்கிய எல்லா உலகங்களையும் காப்பாற்றுகிறார்.
-
ஏஷ ப்ரம்மாச விஷ்ணுச்ச ஷிவ ஸ்கந்த: ப்ரஜாபதி: |
மஹேந்த்ரோ தனத: காலோ யம: சோமோ ஹ்யபாம்
பதி: || 8 ||

#விளக்கம்: ஸூர்ய பகவானே ப்ரம்மன், விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், காலன், ப்ரஜாபதி, மஹா இந்த்ரன், யமன், சந்த்ரன், குபேரன் மற்றும் வருணன்.
-
பித்ரோ வஸவ: ஸாத்யா ஹ்யஷ்வினௌ மருதோ
 மனு: |
வாயுர்வஹ்னி ப்ரஜாப்ராண: ருது கர்த்தா ப்ரபாகர: || 9 ||

#விளக்கம்: ஸூர்ய பகவானே பித்ரு, வசு, தனங்களை அளிப்பவர், தெய்வாம்ஸமுள்ள யோகிகள், தேவர்கள், தேவலோக வைத்தியர்கள், மனு, வாயு, அக்னி ஆவார். அவரே எல்லா பருவங்களையும் சீதோஷ்ணங்களையும் ஷ்ருஷ்டிக்கிறார். எல்லா உயிர்களையும் காக்கிறார். தனது ஒளியால் ஞானத்தை கொடுக்கிறார். உதயத்தை ஏற்படுத்துகிரார்.
-
ஆதித்ய ஸ்விதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் |
சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் அதிதியின் புதல்வன். அதிதி தேவி தேவர்களுக்கெல்லாம் தாய். அண்ட சராசரங்களையும் படைத்தவள். தங்கத்திற்கு நிகரான ஒளியைக் கொண்டவள். அவளே எல்லா உலகங்களுக்கும் வாழ்வாதாரம். அவளே விடியலின் தேவதை.
-
ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: சப்த சப்தி: மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்புஸ்த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் || 11 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் ஆயிரம் கிரணங்களை உடையவர். ஏழு பசுமஞ்சள் நிறமுடைய குதிரைகளை உடையவர். இருளை அகற்றுகிறவர். துரத்ரிஷ்டத்தை விரட்டுகிறவர். தனது கிரணங்களை எங்கும் நிறைக்கிரார். எங்கும் நிறைந்திருக்கிரார்.
'
ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |
அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.
-
வ்யாமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: || 13 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.
-
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் அண்ட வெளியின் ஆசான். அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார். எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
-
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன்
 நமோஸ்துதே || 15 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம்.
-
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||

#விளக்கம்: ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.
-
ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம: |
நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம: || 17 ||

#விளக்கம்: வெற்றியாளனுக்கு நமஸ்காரம். அந்த வெற்றியால் கிட்டும் அனைத்து செல்வங்களுக்கும் நமஸ்காரம். ஆயிரம் கதிர்களுடையவனுக்கு நமஸ்காரம். அதிதியின் புத்ரனுக்கு நமஸ்காரம்.
-
நம: உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ
நம: || 18 ||

#விளக்கம்: மிகுந்த உக்கிரமும் தைரியமும் வாய்ந்தவனுக்கு நமஸ்காரம். தடைகளற்றவனுக்கு நமஸ்காரம். தாமரையை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம். வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.
-
ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||

#விளக்கம்: அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
-
தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே
 நம: || 20 ||

#விளக்கம்: இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய் நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
-
தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக
 ஸாக்ஷினே || 21 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பானவர். அவருக்கு நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
-
நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||

#விளக்கம்: ஸூர்ய பகவானே இந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.
-
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||

#விளக்கம்: உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.
-
வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||

#விளக்கம்: ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
-
ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச |
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி
 ராகவா || 25 ||

விளக்கம்: ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.
-
பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி || 26 ||

விளக்கம்: தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா போர்களிலும் வெற்றி கிட்டும்.
-
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் || 27 ||

விளக்கம்: அக்ஸ்த்ய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்.
-
ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத |
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் || 28 ||

விளக்கம்: அக்ஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமன், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தான். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தான்.
-
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் || 29 ||

விளக்கம்: ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை நீரை அருந்தி தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தந்து வில்லை எடுத்தார்.
-
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||

விளக்கம்: யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ஸ்ரீராமன், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான்.

இறுதி ஸ்தோத்ரம்

அத ரவிரவதன்னிரீக்ஷய ராமம் முதிதமனாஹ ப்ரமம் ப்ரஹ்ருஷ்யமான: |
நிஷிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா சுரகண மத்யகதோ வாச்ஸ்த்ரவேதி ||

விளக்கம்: யுத்த களத்தில் ஸ்ரீராமனைப் பார்த்த ஸூர்ய பகவான், ராவணனின் முடிவு உறுதி எனத் தெரிந்து கொண்டான். ஸ்ரீராமனுக்கு, அதற்கான வழியையும் காண்பித்தான்.

இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை, உண்மையான பக்தியுடன் உதயமாகும் ஸூர்யனைப் பார்த்து மும்முறை சொல்லி வந்தால், வாழ்வில் எல்லா தடைகளும் நீங்கி எதிரிகளை வென்று சிறப்புடன் வாழலாம்.

🍀தொகுப்பு :  🍀திருமதி லதா வெங்கடேஷ்வரன்🍀

Sunday, 16 December 2018

திருப்பாவை_விளக்கம்

#திருப்பாவை_விளக்கம்

#முன்னுரை

மார்கழி மாதம் என்றாலே, இந்துக்களுக்கு உடனே நினைவில் வருவது திருப்பாவைதான். நாலாயிர திவ்ய பிரபந்தங்களில் உள்ள அனைத்துப் பாசுரங்களிலும் மிகவும் அதிகமாக பிரபலம் ஆனது திருப்பாவை என்றால் மிகையாகாது. நாச்சியார் திருமொழி என்ற பெயரில் ஆண்டாள் அருளிய பாசுரங்கள் தொகுக்கப்பட்டு இருப்பதை அறியாத பலரும் திருப்பாவையின் ஆசிரியர் யார் என்று கேட்டால், உடனே ஆண்டாள் என்று பதில் சொல்லும் அளவுக்கு திருப்பாவை பிரபலம். சைவம், வைணவம் ஆகிய இரண்டு பிரிவினரும் அனுபவிக்கும் பாடல்கள் நிறைந்த தொகுப்பு திருப்பாவை.
ஆண்டாள் அருளியுள்ள #முப்பது_பாடல்கள் கொண்ட இந்த தொகுப்பினை பாடுவதும், ஒவ்வொரு பாடலுக்கு ஒவ்வொரு நாள் என்று பாடலின் விரிவான விளக்கங்களை சிந்தித்து மார்கழி மாதத்தில் களிப்பதும், பல பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் தவறாமல் நடைபெற்று வரும் நிகழ்ச்சியாக இருந்து வந்தது. இன்று தொலைக்காட்சி பெட்டிகள் நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான அங்கமாக மாறிய பின்னர், ஏறக்குறைய எல்லா தமிழ் சேனல்களும், மார்கழி மாதத்தில் திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை ஒளிபரப்புகின்றன.

இந்த முப்பது பாடல்களையும் படிக்கும் கன்னிப் பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது. கண்ணபிரானையே தனது கணவனாக வரித்து அவனுடன் சேரும் நாள் எப்போதோ என்ற ஏக்கத்தில் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி பாடல்களை பாடிய ஆண்டாள், ஒரு நாள் திருவரங்கம் கோயிலில் பெருமாளுடன் கலந்து விடுகின்றார். தன்னை ஆய்ப்பாடி பெண்களில் ஒருத்தியாக நினைத்துக் கொண்டு, மற்ற ஆயர்பாடி பெண்களுடன் சேர்ந்து பாவை நோன்பு நோற்பதாக கற்பனை செய்யும் பாடல்கள் கொண்ட இனிய பாசுரம், திருப்பாவை ஆகும்.

நன்றி  :  தினமணி.

திருப்பாவை பாசுரம்

☘#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை☘

☘#திருப்பாவை_பாசுரம்
☘: 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

☘#பொருள்☘: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான
நன்றி தினமலர்  முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

☘#விளக்கம்☘: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

☘#நன்றி  :  #தினமலர்☘.

☘#தொகுப்பு  :  #திருமதி_லதா_வெங்கடேஷ்வரன் .☘


#ஸ்ரீ_ஆண்டாள்_அருளிய_திருப்பாவை_பாசுரம்_தொடரும்............☘

ஹனுமன்_சாலீசா

#ஹனுமன்_சாலீசா #பொருள்_உரையுடன்  அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும்.  தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உட...